கல்வி ஆலோசனை நிறுவனத்துக்கு ரூ.55 ஆயிரம் அபராதம்
கல்வி ஆலோசனை நிறுவனத்துக்கு ரூ.55 ஆயிரம் அபராதம். நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
நாகர்கோவில்,
நாகர்கோவில் வடசேரி பகுதியை சேர்ந்தவர்கள் பிரதீப் பால் மற்றும் குமரன். இவர்கள் நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் உள்ள ஒரு கல்வி ஆலோசனை நிறுவனத்தில் போலந்தில் உள்ள வார்ஷா தொழில் நுட்ப பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி படிப்பதற்காக பணம் செலுத்தியுள்ளனர். கல்வி ஆலோசனை நிறுவனம் பணத்தை பெற்றுக்கொண்டு விசா மற்றும் படிப்பதற்கான வசதிகளை அவர்களுக்கு செய்து கொடுப்பதாக உறுதி அளித்துள்ளது. ஆனால் இருவருக்கும் வார்சாவில் பயில உரிய வசதிகள் செய்து தரப்படவில்லை. ஆகவே கல்வி நிறுவனத்திடம் தாங்கள் செலுத்திய கட்டணத்தை திரும்பத் தருமாறு கேட்டுள்ளனர். கல்வி நிறுவனம் பணத்தை திரும்ப வழங்கவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட பிரதீப் பால் மற்றும் குமரன் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பினர். ஆனாலும் உரிய பதில் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த அவர்கள் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் கல்வி ஆலோசனை நிறுவனத்தின் சேவை குறைப்பாட்டை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கனவே செலுத்திய தொகை ரூ.47 ஆயிரத்து 600, நஷ்ட ஈடாக ரூ.55 ஆயிரம் மற்றும் வழக்கு செலவு ரூ.8 ஆயிரம் ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.