முயலை வேட்டையாடியவர்களுக்கு ரூ.35 ஆயிரம் அபராதம்
முயலை வேட்டையாடியவர்களுக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மணப்பாறை:
திருச்சி வன மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதீஸ் மற்றும் திருச்சி மாவட்ட வன அலுவலர் (பொறுப்பு) அகில் தம்பி உத்தரவின்பேரில் மணப்பாறை வனச்சரக அலுவலர் மகேஸ்வரன் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாரி வேட்டைக்கு சென்ற வளநாடு மற்றும் கோவில்பட்டியை சேர்ந்த 5 பேர் வனத்துறையினரிடம் பிடிபட்டனர். இதில் முயலுடன் 3 பேர் சிக்கியது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து பிடிபட்டவர்களுக்கு ரூ.35 ஆயிரம் இணக்க கட்டணம் விதிக்கப்பட்டது. இதற்கிடையே நேற்று காலை முதல் வன விலங்குகளை வேட்டையாடக்கூடாது என மணப்பாறை சுற்று வட்டார பகுதிகளில் வனத்துறையினர் பிரசாரம் செய்தது குறிப்பிடத்தக்கது. இது சம்பந்தமாக வனச்சரக அலுவலர் கூறுகையில், 'பாரி வேட்டைக்கு செல்வது வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972-ன் படி தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும். ஊர்களில் உள்ள முக்கியஸ்தர்கள் கலந்து ஆலோசித்து பாரி வேட்டையில் இருந்து மாற்று வழியை யோசித்து அழிந்து வரும் வன உயிரினங்களை காப்பாற்ற கேட்டுக்கொள்வதாக, தெரிவித்தார்.