பட்டாசு கடையில் தீ விபத்து


பட்டாசு கடையில் தீ விபத்து
x

மணமேல்குடி அருகே பட்டாசு கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் தீப்பற்றி நாசமாயின.

புதுக்கோட்டை

பட்டாசு கடை

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அடுத்த பொன்னகரம் பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து. இவர் மணமேல்குடி கடைவீதியில் அரசு அனுமதி பெற்று பட்டாசு கடை நடத்தி வருகிறார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்வதற்காக பல லட்சம் ரூபாய் மதிப்பில் ஏராளமான பட்டாசு வகைகளை கொள்முதல் செய்து கடையில் வைத்திருந்தார். நேற்று இரவு வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.

தீப்பற்றியது

இந்த நிலையில் இன்று அதிகாலை கடையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசுகள் சரமாரியாக வெடித்து கடை முழுவதும் தீப்பற்றி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. உடனே அங்கு கூடியிருந்த பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. கடைக்குள் இருந்த அனைத்து பட்டாசுகளும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.

உடனே ஜெகதாப்பட்டினம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் கடை முழுவதும் எரிந்ததோடு, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளும் நாசமாயின. மேலும் விரைவாக தீ அணைக்கப்பட்டதால் பக்கத்துக்கு கடைகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இந்த விபத்தால் கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story