நடைபாதையில் தூங்குவதில் ஏற்பட்ட பிரச்சினையில் நண்பரே தீர்த்துக்கட்டியது அம்பலம்
கோவையில் சமையல் தொழிலாளியை கொலை செய்யப்பட்டார். நடைபாதையில் தூங்குவதில் ஏற்பட்ட பிரச்சினையில் அவரது நண்பரே அடித்துக்கொன்றது அம்பலமாகி உள்ளது. அவரை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.
கோவை
கோவையில் சமையல் தொழிலாளியை கொலை செய்யப்பட்டார். நடைபாதையில் தூங்குவதில் ஏற்பட்ட பிரச்சினையில் அவரது நண்பரே அடித்துக்கொன்றது அம்பலமாகி உள்ளது. அவரை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.
சமையல் தொழிலாளி கொலை
கோவை மாவட்டம் வால்பாறை காந்திநகரை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 48), சமையல் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலை, நேரு விளையாட்டு மைதானம் அருகே ஆடீஸ் வீதியில் உள்ள பெட்டிக்கடையின் மேஜையில் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கொலையாளியை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.
போலீசாரின் விசாரணையில், நடைபாதையில் தூங்குவதில் ஏற்பட்ட இடபிரச்சினையில் ராஜேசை, அவரது நண்பரே உருட்டுக்கட்டையால் அடித்துக்கொன்றது அம்பலமாகி உள்ளது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-
தூங்குவதில் இட பிரச்சினை
கோவை ஆடிஸ் வீதியில் உள்ள நடைபாதையில் ராஜேஷ், பென்னி உள்ளிட்டோர் தங்கியிருந்து சமையல் உள்ளிட்ட வேலைக்கு சென்றுவந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்றுவிட்டு, மதுபோதையில் வந்த ராஜேஷ் தான் வழக்கமாக படுத்து தூங்கும் இடத்திற்கு சென்றார்.
அப்போது அங்கு தனது நண்பரும், சமையல் தொழிலாளியுமான கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டம் நெல்லிப்பாடா பகுதியை பென்னி என்பவர் படுத்து இருந்தார். அப்போது அவரிடம் ராஜேஷ், இது தான் வழக்கமாக தூங்கும் இடம் என்றும், வேறுஇடத்தில் படுக்குமாறு கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்கள் இடையே இடபிரச்சினை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜேஷ், பென்னியை தாக்கியதாக தெரிகிறது.
கட்டையால் அடித்து கொன்றார்
அங்கிருந்து சென்ற பென்னி, டாஸ்மாக் கடைக்கு சென்று மதுகுடித்தார். அப்போது தன்னை தாக்கிய ராஜேசை கொலை செய்ய முடிவு செய்தார். உடனே அந்த பகுதியில் கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்துக்கொண்டு ஆடீஸ் வீதிக்கு சென்றார்.
அப்போது அங்கு, ராஜேஷ் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். இதனை பயன்படுத்திக்கொண்ட அவர் உருட்டுக்கட்டையால் அவரது தலையில் சரமாரியாக தாக்கினார். இதில் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.
கேரளாவுக்கு தப்பினார்
இதையடுத்து போலீசாருக்கு பயந்த பென்னி உருட்டுக்கட்டையை அங்கேயே போட்டுவிட்டு, கோவை ரெயில்வே நிலையத்துக்கு சென்று, அங்கிருந்து கேரள செல்லும் ரெயில் தப்பிச்சென்றுவிட்டார். இந்த காட்சி ரெயில்வே நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் அவரை பிடிக்க கேரள விரைந்துள்ளனர். மேலும் பென்னி தலைமறைவாக உள்ளதால் அவரது குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.