ஓடும் மோட்டார் சைக்கிளில் சீறிய பாம்பு


ஓடும் மோட்டார் சைக்கிளில் சீறிய பாம்பு
x
தினத்தந்தி 26 Oct 2023 1:15 AM IST (Updated: 26 Oct 2023 1:16 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில், ஓடும் மோட்டார் சைக்கிளில் பதுங்கி இருந்த பாம்பு சீறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்

பாம்பு சீறியது

திண்டுக்கல் கோவிந்தாபுரத்தை சேர்ந்தவர் பிரேம் (வயது 45). நேற்று காலை இவர், தனது மோட்டார் சைக்கிளில் எம்.வி.எம். அரசு மகளிர் கலைக்கல்லூரி அருகே உள்ள மேம்பால இணைப்பு சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளின் முன்பகுதியில் இருந்து ஒரு பாம்பு சீறிக்கொண்டு இருப்பதை அவர் பார்த்தார். இதனால் திடுக்கிட்ட அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சாலையில் போட்டுவிட்டு சற்று தூரம் ஓடி நின்றார். அவர் பதற்றமாக இருப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர், அதுகுறித்து அவரிடம் கேட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளுக்குள் பாம்பு புகுந்திருப்பதாக அவர் கூறினார். இதையடுத்து திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் சிவக்குமார் தலைமையில் தீயணைப்புப்படை வீரர்கள் விரைந்து வந்து மோட்டார் சைக்கிளுக்குள் பதுங்கி இருக்கும் பாம்பை மீட்கும் முயற்சியில் இறங்கினர்.

போக்குவரத்து பாதிப்பு

ஆனால் பாம்பு அவர்களிடம் சிக்காமல் மோட்டார் சைக்கிளுக்குள் ஊடுருவி சென்று பதுங்கியது. இதனால் அதனை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து மோட்டார் சைக்கிளின் உதிரி பாகங்களை ஒவ்வொன்றாக கழற்றிய தீயணைப்பு படையினர், சில மணி நேர போராட்டத்துக்கு பின்னர் மோட்டார் சைக்கிளுக்குள் பதுங்கி இருந்த பாம்பை பத்திரமாக மீட்டனர். இதுகுறித்து தீயணைப்பு படைவீரர்கள் கூறுகையில், பிடிபட்டது 2 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு ஆகும். அதனை வனத்துறையினரிடம் ஒப்படைத்துவிட்டோம் என்றனர். இந்த சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக மோட்டார் சைக்கிளில் பதுங்கிய பாம்பை பிடிக்கும் முயற்சியில் தீயணைப்பு படைவீரர்கள் ஈடுபடுவதை அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் நின்று வேடிக்கை பார்த்தனர். அதேபோல் எம்.வி.எம். அரசு மகளிர் கல்லூரி அருகில் உள்ள மேம்பாலத்திலும் வாகனங்களை நிறுத்தி பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story