சென்னை சைதாப்பேட்டையில் கோர்ட்டு வளாகத்தில் ரவுடியை வெட்டிக்கொல்ல முயற்சி


சென்னை சைதாப்பேட்டையில் கோர்ட்டு வளாகத்தில் ரவுடியை வெட்டிக்கொல்ல முயற்சி
x

சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டு வளாகத்தில் ரவுடியை வெட்டிக்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரபல ரவுடி

மதுரையைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி பாலா (வயது 38). இவர் மீது தமிழகத்தில் உள்ள பல மாவட்ட போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.

2021-ம் ஆண்டு மார்ச் மாதம் 4-ந் தேதி சென்னை அசோக் நகரில் மயிலாப்பூரை சேர்ந்த பிரபல ரவுடி சிவகுமாரை ஒரு கும்பல் கொடூரமாக வெட்டிக்கொலை செய்தது. இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக மதுரை பாலாவை போலீசார் கைது செய்தனர்.

கடந்த மே மாதம் 19-ந் தேதி அமைந்தகரை செனாய் நகர் பூங்கா பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த பைனான்சியர் ஆறுமுகம் என்பவரை படுகொலை செய்த வழக்கில் மதுரை பாலாவின் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர்.

கொலை செய்ய முயற்சி

இந்த நிலையில் மயிலாப்பூரைச் சேர்ந்த ரவுடி சிவகுமார் கொலை வழக்கில் வேலூர் சிறையில் இருந்த கூலிப்படை தலைவன் மதுரை பாலாவை நேற்று மதியம் 2.30 மணிக்கு சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர்.

அப்போது திடீரென அங்கு மறைந்திருந்த 5 பேர் கும்பல் ரவுடி மதுரை பாலாவை கத்தியால் வெட்டி கொலை செய்ய முயன்றது. ஆனால் பாதுபாப்பு பணியில் இருந்த போலீசார், பாலாவை பத்திரமாக மீட்டனர். கோர்ட்டு வளாகத்தில் நடந்த இந்த தாக்குதலால் அங்கு வழக்கு விசாரணைக்காக வந்திருந்தவர்கள், சில வக்கீல்கள் உள்ளிட்டோர் அலறி அடித்து ஓடினர்.

மடக்கி பிடித்தனர்

இதை சற்றும் எதிர்பாராத பாதுகாப்பு போலீசார், குற்றவாளிகளை பிடிப்பதற்காக வக்கீல்கள் சிலருடன் விரட்டிச்சென்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசான ராஜலட்சுமி, கிருஷ்ணவேணி, சசிகலா ஆகியோர் துணிச்சலுடன் செயல்பட்டு ஆயுதப்படை போலீசாருடன் இணைந்து கத்தியுடன் ஓடிய மர்ம கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.

3 பேரை மடக்கிப்பிடித்த நிலையில் 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் பாரதி என்பவருக்கு மர்ம நபர்கள் வைத்திருந்த கத்தி கிழித்ததில் கையில் காயம் ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் கோட்டூர்புரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிடிபட்ட 3 பேரையும் கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

காரணம் என்ன?

விசாரணையில் அவர்கள் சென்னை ஷெனாய் நகரைச் சேர்ந்த சக்திவேல் (25), அருண் (26), குன்றத்தூரைச் சேர்ந்த அப்துல் மாலிக் (25) என தெரிய வந்தது. அவர்கள் எதற்காக மதுரை பாலாவை கோர்ட்டு வளாகத்திலேயே கொலை செய்ய முயன்றனர்? இதன் பின்னணியில் யார், யார் இருக்கிறார்கள்? என பிடிபட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தப்பி ஓடிய மற்ற 2 பேரையும் கோட்டூர்புரம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகுமார் கொலைக்கு பழிவாங்க முயன்றனரா? அல்லது சென்னை உள்பட பல முக்கிய இடங்களில் ரவுடி மாமூல் வசூலிக்கும் தகராறில் கொலை செய்ய முயன்றனரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் பட்டப்பகலில் கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்ட ரவுடியை மர்ம கும்பல் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story