மலைப்பாதையில் விழுந்த ராட்சத மரம்
கொடைக்கானலில் பலத்த காற்று வீசியதால் மலைப்பாதையில் ராட்சத மரம் விழுந்தது. படகு சவாரி ரத்து செய்யப்பட்டது.
ராட்சத மரம்
கொடைக்கானல் பகுதியில், கடந்த சில தினங்களாக பலத்த காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்தது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக மழை ஓய்ந்த நிலையில் நேற்று பகலில் இயல்பு வாழ்க்கை திரும்பியது. அதேநேரத்தில் பகலில் கடும் குளிர் வாட்டியது.
இதற்கிடையே நேற்று பலத்த காற்று வீசியதால், மேல்மலை கிராமங்களுக்கு செல்லும் மலைப்பாதையில் பூம்பாறை அருகே பாறைக்கூப்பு என்ற இடத்தில் ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. இதேபோல் பல்வேறு இடங்களில் மலைப்பாதையில் மரங்கள் விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
படகு சவாரி ரத்து
இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று மரங்களை வெட்டி அகற்றினர். இதனிடையே பலத்த காற்று காரணமாக பிரையண்ட் பூங்கா எதிரே உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக படகு குழாமில் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
இதனால் சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்ட நிலையில், மற்றொரு இடத்தில் உள்ள படகு இல்லத்தில் படகு போக்குவரத்து தொடங்கியது. இதனால் அங்கு சென்ற சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தனர்.
இருப்பினும் பலத்த காற்று வீசிய நேரங்களில் அங்கும் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மாறிவரும் பருவநிலை காரணமாக, கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.