மோர் மிளகாய் வாங்க வந்த சிறுமி பலாத்காரம்:மளிகை கடைக்காரருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

மளிகை கடைக்கு மோர் மிளகாய் வாங்க வந்த 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் மளிகை கடைக்காரருக்கு கோவை போக்சோ கோர்ட்டில் 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கோவை: மளிகை கடைக்கு மோர் மிளகாய் வாங்க வந்த 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் மளிகை கடைக்காரருக்கு கோவை போக்சோ கோர்ட்டில் 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சிறுமி பலாத்காரம்
கோவை ராமநாதபுரம் பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தவர் கனகராஜ் (வயது76). கடந்த 17.8.2020-ல் மோர் மிளகாய் வாங்குவதற்காக அந்த கடைக்கு 10 வயது சிறுமி வந்தார். அப்போது கனகராஜ், அந்த சிறுமியை நைசாக கடைக்குள் அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவத்தை யாரிடமும் கூறக்கூடாது என்றும், கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டி உள்ளார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறி கதறி அழுதாள்.உடனே சிறுமியின் பெற்றோர் கோவை கிழக்குப்பகுதி மகளிர் போலீசில் புகார் செய்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் வியாபாரி கனகராஜ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
20 ஆண்டு சிறை
இந்த வழக்கு விசாரணை கோவை போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரணை நடத்திய நீதிபதி குலசேகரன் நேற்று தீர்ப்பு கூறினார். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வியாபாரிக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் ரூ.5 லட்சத்தை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறி உள்ளார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ரஷிதா ஆஜர் ஆகி வாதாடினார். தண்டனை விதிக்கப்பட்ட கனகராஜ் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.