மலைப்பாதையில் பழுதாகி நின்ற அரசு பஸ்
வால்பாறை அருகே மலைப்பாதையில் அரசு பஸ் பழுதாகி நின்றது. இதனால் நடுவழியில் பயணிகள் தவித்தனர்.
வால்பாறை
வால்பாறை அருகே மலைப்பாதையில் அரசு பஸ் பழுதாகி நின்றது. இதனால் நடுவழியில் பயணிகள் தவித்தனர்.
அரசு பஸ்
பொள்ளாச்சியில் இருந்து நேற்று காலை 6 மணிக்கு வால்பாறை அருகே உள்ள ஹைபாரஸ்ட் எஸ்டேட் பகுதிக்கு அரசு பஸ் ஒன்று வந்தது. பின்னர் காலை 10.30 மணிக்கு அங்கிருந்து 25 பயணிகளுடன் பொள்ளாச்சியை நோக்கி திரும்பி சென்று கொண்டு இருந்தது.
முடீஸ்-வால்பாறை சாலையில் ஆனைமுடி எஸ்டேட் பிரிவு அருகே சென்றபோது, நடுவழியில் திடீரென அந்த பஸ் பழுதானது. உடனே பஸ்சை டிரைவர் சாலையோரம் நிறுத்தினார். இதனால் மலைப்பாதையில் பயணிகள் நடுவழியில் தவித்தனர்.
ஊழியர்கள் வரவில்லை
இதையடுத்து சேக்கல்முடியில் இருந்து பொள்ளாச்சி நோக்கி மற்றொரு அரசு பஸ் வந்தது. அந்த பஸ்சில் பயணிகள் ஏற்றி விடப்பட்டனர்.
இதற்கிடையில் பஸ் பழுதானது குறித்து டிரைவர் மற்றும் கண்டக்டர் பொள்ளாச்சி பணிமனைக்கும், வால்பாறை பணிமனைக்கும் தகவல் கொடுத்தனர். ஆனால் மதியம் 2 மணி வரை ஊழியர்கள் யாரும் வரவில்லை. இதனால் அவர்கள் நடுவழியில் தொடர்ந்து தவித்தனர்.நீண்ட நேரத்துக்கு பிறகு ஊழியர்கள் வந்து பழுதை சரி செய்தனர். அதன்பிறகே பஸ்சை அங்கிருந்து பொள்ளாச்சிக்கு டிரைவர் மற்றும் கண்டக்டர் ஓட்டி சென்றனர்.