ஆபாசமாக சித்தரித்து விற்பனை ஈரோட்டை சேர்ந்த பட்டதாரி வாலிபர் கைது


ஆபாசமாக சித்தரித்து விற்பனை ஈரோட்டை சேர்ந்த பட்டதாரி வாலிபர் கைது
x

சூப்பர் மார்க்கெட்டுகள், வணிக வளாகங்களுக்கு வரும் பெண்களை செல்போனில் வீடியோ எடுத்து ஆபாசமாக சித்தரித்து விற்பனை செய்த ஈரோட்டை சேர்ந்த பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை

சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், தெற்கு மண்டல 'சைபர் கிரைம்' போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது பிரபல ஜவுளி நிறுவனத்தில் துணி எடுக்க சென்றிருந்தேன். அப்போது எனக்கு தெரியாமல் யாரோ என்னை படம்பிடித்து, ஆபாசமாக சித்தரித்து, 'டெலிகிராம்' செயலியில் விற்பனை செய்து வருகின்றனர்' என்ற அதிர்ச்சி தகவலை கூறி இருந்தார். இந்த புகார் மனு குறித்து சென்னை தெற்கு மண்டல இணை கமிஷனர் சிபி சக்ரவர்த்தி அறிவுறுத்தலின்பேரில் 'சைபர் கிரைம்' இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இதில் ஈரோட்டில் இருந்து இந்த படுபாதக செயல் அரங்கேறி இருப்பது தெரிய வந்தது. அதனடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அக்ரகாரம் பகுதியை சோ்ந்த என்.எம்.ஆர்யா (வயது 22) என்ற வாலிபர் இந்த வழக்கில் சிக்கினார். தனிப்படை போலீசார் ஈரோடு சென்று அவரை கைது செய்தனர்.

விசாரணையில் ஆர்யா, பி.டெக் பட்டதாரி என்பது தெரிய வந்தது. இவர், சூப்பர் மார்க்கெட், வணிக வளாகங்களுக்கு வரும் பெண்களை அவர்களுக்கு தெரியாமல் மறைமுகமாக செல்போன் மூலம் வீடியோ, புகைப்படங்கள் எடுத்துள்ளார். பின்னர் அந்த 'வீடியோ' மற்றும் புகைப்படங்களை தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஆபாசமாக சித்தரித்துள்ளார்.

பின்னர் இந்த வீடியோக்களை 'டெலிகிராம்' செயலி குழுவில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோக்களை பார்ப்பதற்கு பாஸ்வேர்டுகளை உருவாக்கி உள்ளார். 'ஆன்லைன்' வழியாக பணம் செலுத்தினால் இந்த பாஸ்வேர்டை அனுப்பி வைப்பார். இதன் மூலம் அவர் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார்.

போலீசார் விசாரணையில் இந்த அதிர்ச்சிகர தகவல் வெளியானது. அவரிடம் இருந்து 1 செல்போன், 1 லேப்டாப், வங்கி கணக்கு அட்டைகள், பெண்களை ஆபாசமாக சித்தரித்து வைக்கப்பட்டிருந்த 2 ஹார்ட் டிஸ்குகள் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணைக்கு பின்னர் ஆர்யா நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதே போன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடைகளுக்கு செல்லும் பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து டெலிகிராம் செயலி குழுவில் பதிவிட்டு விற்பனை செய்யும் நபர்களை பிடிக்க சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story