மின்னல் தாக்கி பட்டதாரி வாலிபர் பலி


மின்னல் தாக்கி பட்டதாரி வாலிபர் பலி
x

மின்னல் தாக்கி பட்டதாரி வாலிபர் உயிரிழந்தார்.

திருச்சி

உப்பிலியபுரம்:

மீன் பிடிக்க சென்றனர்

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் அருகே உள்ள ஒட்டம்பட்டி பஜனைமட தெருவை சேர்ந்தவர் பொன்னுசாமி. விவசாய தொழிலாளி. இவரது மகன் நாகராஜ்(வயது 23). கேட்டரிங் பட்டதாரியான இவர் விவசாய வேலை செய்து வந்தார். மேலும் இவருக்கு திருமணம் செய்வதற்காக குடும்பத்தினர் பெண் பார்த்து வந்தனர்.

இந்நிலையில் நாகராஜும், அவரது உறவினர்களான பிரதீப்(10), நித்தீஸ்(12), சிக்கத்தம்பூரை சேர்ந்த ஆனந்தனின் மகன்களான ராகேஷ்(14), சரண்(11), ரெங்கநாதபுரத்தை சேர்ந்த சின்னதுரை(25), அருண்குமார்(22) ஆகியோரும் நேற்று சிக்கத்தம்பூரில் உள்ள ஏரியில் மீன் பிடிக்க சென்றனர்.

மின்னல் தாக்கியது

மதிய நேரத்தில் அவர்கள் ஏரியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் இடி, மின்னலுடன் லேசான தூறலாக மழை பெய்ய தொடங்கியது. இதனால் மழையில் நனையாமல் இருப்பதற்காக, அவர்கள் ஏரிக்கரையில் உள்ள புளிய மரத்தடியில் ஒதுங்கி நின்றனர்.

அப்போது அப்பகுதியில் திடீரென மின்னல் தாக்கியது. இதில் மரத்தடியில் நின்ற 7 பேரும் மயங்கிய நிலையில் சுருண்டு விழுந்தனர். சிறிது நேரம் கழித்து கண் விழித்த அவர்கள் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று அபயக்குரல் எழுப்பினர். இதைக்கண்ட அருகில் இருந்தவர்கள் அங்கு விரைந்து சென்று 7 பேரையும் மீட்டு, கிராம நிர்வாக அலுவலர் துரைகதிரவனுக்கு தகவல் அளித்தனர். அவர் இது பற்றி 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தார்.

சாவு

இதையடுத்து அங்கு வந்த 108 ஆம்புலன்சில் இருந்த மருத்துவ உதவியாளர், மின்னல் தாக்கியதில் பாதிக்கப்பட்ட 7 பேரையும் பரிசோதித்தார். அப்போது நாகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து மற்ற 6 பேரும் சிகிச்சைக்காக துறையூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் பிரதீப்புக்கு அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போலீசார் விசாரணை

இது குறித்த தகவலின்பேரில் துறையூர் தாசில்தார் புஷ்பராணி, இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இது பற்றி தகவல் அறிந்த துறையூர் எம்.எல்.ஏ. ஸ்டாலின்குமார் மருத்துவமனைக்கு சென்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இதற்கிடையே துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நாகராஜின் உடல் பிரேத பரிசோதனைக்குப்பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடலை உறவினர்கள் ஒட்டம்பட்டிக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். அவரது உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்டோர் கதறி அழுதது, அங்கிருந்த மற்றவர்களையும் கண்கலங்க செய்தது. இதையடுத்து இறுதிச்சடங்குகளுக்கு பின், அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

சோகம்

இந்த சம்பவம் குறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஏரியில் மீன்பிடிக்க சென்ற வாலிபர் மின்னல் தாக்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story