மேல்பாதி திரவுபதியம்மன் கோவிலில் ஒரு தரப்பினர் சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை
15 நாட்களுக்குள் மேல்பாதி திரவுபதியம்மன் கோவிலில் ஒரு தரப்பினரை அழைத்துச்சென்று சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்டாட்சியர் பிரவீனாகுமாரி தெரிவித்துள்ளார்.
கோவில் பூட்டி சீல்வைப்பு
விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் உள்ள தர்மராஜா, திரவுபதியம்மன் கோவிலில் வழிபாடு நடத்த ஒரு தரப்பினருக்கு மற்றொரு தரப்பினர் அனுமதி மறுத்தனர். இப்பிரச்சினை தொடர்பாக 9 கட்டங்களாக இரு தரப்பினரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தியும் சுமூகமான உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் பாதுகாத்திடும் வகையில் அந்த கோவில், கடந்த ஜூன் மாதம் 7-ந் தேதி பூட்டி சீல் வைக்கப்பட்டதோடு கோவில் மற்றும் கோவில் வளாகத்தில் யாரும் பிரவேசிக்கக்கூடாது என்று 145 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து இக்கோவிலில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரையும் தனித்தனியாக அழைத்து விசாரணை செய்வது என்றும் ஒரு தரப்பை சேர்ந்த (அ பிரிவினர்) 50 பேரிடமும், மற்றொரு தரப்பை சேர்ந்த (ஆ பிரிவினர்) 32 பேரிடமும் ஆக மொத்தம் 82 பேரிடம் விசாரணை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில் இரு தரப்பினரையும் தனித்தனியாக அழைத்து அவர்களிடம் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். இருப்பினும் இதுவரையிலும் சுமூகதீர்வு எட்டப்படவில்லை.
அமைதி பேச்சுவார்த்தை
இதனை தொடர்ந்து நேற்று ஒரு தரப்பை சேர்ந்த (ஆ பிரிவினர்) 10 பேரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அவர்களுக்கு அழைப்பாணை கடிதம் அனுப்பப்பட்டது. அவர்களில் 8 பேர் நேற்று காலை விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்களிடம் கோட்டாட்சியர் பிரவீனாகுமாரி அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள், கோட்டாட்சியர் பிரவீனாகுமாரியிடம், எங்கள் தரப்பினர் கோவிலில் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டுமென முறையிட்டனர்.
அதன் பிறகு பேச்சுவார்த்தை முடிந்து அவர்கள் வெளியே வந்தனர். அப்போது விசாரணையில் கலந்துகொண்ட வக்கீல்கள் தமிழ்மாறன், பூவைஆறு ஆகியோர் கூறுகையில், கோட்டாட்சியர் மேற்கொண்ட விசாரணையின் முடிவில், 2 நாட்களுக்குள் எங்கள் தரப்பில் பாதிக்கப்பட்ட 4 பேருக்கு வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் அரசு சார்பில் வழங்கப்படும் நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஒரு வார காலத்திற்குள் எங்கள் தரப்பினரை தாக்கிய நபர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கோட்டாட்சியர் கூறியுள்ளார்.
15 நாட்களுக்குள் நடவடிக்கை
மேலும் 15 நாட்களுக்குள் எங்கள் தரப்பினரை கோவிலுக்குள் அழைத்துச்சென்று, சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோட்டாட்சியர் உறுதியளித்துள்ளார். அவ்வாறு நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் மக்களை திரட்டி அடுத்தகட்ட போராட்டம் நடத்துவது குறித்து முடிவு எடுப்போம் என்றனர்.
இதுகுறித்து கோட்டாட்சியர பிரவீனாகுமாரியிடம் கேட்டபோது, மேல்பாதி கோவில் பிரச்சினையில் சுமூக தீர்வு கண்டு கோவிலை திறக்க இரு தரப்பினரையும் அழைத்து அவர்களின் கருத்துகளை கேட்டறிந்து வருகிறோம். சுமூக தீர்வு ஏற்படும் என நம்புகிறோம். வரும் 15 நாட்களுக்குள் ஒரு தரப்பினரை கோவிலுக்குள் அழைத்துச் சென்று சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.