கனரக வாகனங்கள் செல்ல தடை செய்ய அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட தடுப்பு உடைந்தது
மயிலாடுதுறை டவுன் விரிவாக்க சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை செய்ய அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட தடுப்பு உடைந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
மயிலாடுதுறை டவுன் விரிவாக்க சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை செய்ய அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட தடுப்பு உடைந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
கனரக வாகனங்கள்
மயிலாடுதுறை நகரில் கனரக சரக்கு வாகனங்களின் கட்டுப்பாடற்ற இயக்கத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் அவை முக்கிய வீதிகளின் வழியாக வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நகரில் உள்ள அனைத்து சாலைகளும் மிகவும் குறுகலாக உள்ளதாலும், மீதமுள்ள பகுதிகள் ஆக்கிரமிப்பாளர்களால் சுருங்கியுள்ளதாலும், இருக்கும் இடத்தை பார்க்கிங் மற்றும் வாகனங்கள் செல்ல பகிர வேண்டியுள்ளது.
இந்த நிலையில் கனரக வாகனங்கள் சரக்குகளை ஏற்றி செல்ல நுழைந்தால், போக்குவரத்து ஸ்தம்பித்து விடுகின்றன. இதையடுத்து போக்குவரத்து நெரிசல் ஏற்படும் முக்கிய தெருக்களில் பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல தடை செய்யும் வகையில் உயர்மட்ட தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
உயர்மட்ட தடுப்பு உடைந்தது
மயிலாடுதுறை நகரில் கால்டெக்ஸ் சந்திப்பிலிருந்து செல்லும் பட்டமங்கலத் தெரு சாலையிலும், அதேபோல பட்டமங்கலத் தெருவில் இருந்து டவுன் விரிவாக்க சாலை தொடக்கத்திலும், பெரிய கடைவீதி மார்க்கெட் சந்திப்பிலும் கனரக வாகனங்கள் செல்ல முடியாதவாறு உயர் மட்ட தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று டவுன் விரிவாக்க சாலையில் அமைக்கப்பட்டிருந்த உயர்மட்ட தடுப்பு மீது விதிகளை மீறி சென்ற கனரக வாகனம் ஒன்று மோதியதாக கூறப்படுகிறது.
இதில் அந்த உயர்மட்ட தடுப்பு திடீரென உடைந்து கீழே விழுந்துள்ளது. அப்போது அந்த பகுதி முழுவதும் பலத்த சத்தம் எழுந்துள்ளது. இதனால் அங்கிருந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடியுள்ளனர். ஆனாலும் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித காயமோ, வேறு சேதம் ஏற்படவில்லை. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த வர்த்தகர்கள் கூறுகையில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் அமைக்கப்பட்ட தடுப்புகளை அடிக்கடி ஏதாவது ஒரு கனரக வாகனம் ஊருக்குள் புகுந்து உடைத்து விடுகின்றன. இதுபோன்ற விபத்துகளை ஏற்படுத்தும் வாகனங்களை பறிமுதல் செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.