வீடு புகுந்து 14 பவுன் நகைகள் கொள்ளை

பொள்ளாச்சியில் வீடு புகுந்து 14 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் வீடு புகுந்து 14 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நகைகள் கொள்ளை
பொள்ளாச்சி கோட்டூர் ரோட்டை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மனைவி நாகம்மாள் (வயது 60). ராஜமாணிக்கம் இறந்துவிட்டதால், நாகம்மாள் தனது வீட்டின் கீழ் தளத்தில் தனியாக வசித்து வருகிறார். மேல் தளத்தில் அவரது மகன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி கீழ் தள வீட்டை பூட்டி விட்டு நாகம்மாள் திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்றதாக தெரிகிறது. நேற்று திரும்பி வந்தபோது கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள் கீழே சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 14 பவுன் நகைகள் கொள்ளை போயிருந்தது.
தனிப்படை அமைப்பு
இதுகுறித்து பொள்ளாச்சி நகர கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிந்து இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.
இது தவிர அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் தனிப்படை அமைக்கப்பட்டு கொள் ளையில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பொள்ளாச்சி பகுதியில் 3 வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் நகைகளை கொள்ளையடித்து சென்று உள்ளனர். இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.






