தலைமை செயலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம்
கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தலைமை செயலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
கரூரில் நேற்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைமை செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் முத்து விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். அப்போது நிறுவனர் ஈசன் முருகசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- விவசாயிகளின் உற்பத்தி பொருளுக்கு, உற்பத்தி செலவை விட 50 சதவீதம் சேர்த்து விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அதற்கு சட்ட பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும். அரசு கொள்முதல் செய்து வினியோகம் செய்ய வேண்டும். தமிழக அரசு கள்ளுக்கு தடையை நீக்க வேண்டும். பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய்களை ரேஷன் கடையில் மானிய விலையில் விற்க வேண்டும். மத்திய அரசு கொப்பரை தேங்காய்க்கு ஒரு கிலோவுக்கு ரூ.150 வழங்க வேண்டும். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். பயிர் காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செய்த ஒவ்வொரு விவசாயி யும் தனிப்பட்ட முறையில் பயன்பெறும் வகையில் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம், மனு கொடுக்கும் இயக்கத்தை நடத்தினோம். இதில் தமிழக அரசுக்கு 6 கோரிக்கையும், மத்திய அரசுக்கு 4 கோரிக்கைகளும் வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு 6 கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வருகிற அக்டோபர் மாதம் 10-ந்தேதி சென்னை தலைமை செயலகம் முன்பு 2 ஆயிரம் விவசாயிகளோடு கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் காத்திருப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டத்தை நடத்துவதாக தீர்மானித்துள்ளோம், என்றார்.