முன்விரோதத்தில் ஜல்லிக்கட்டு வீரருக்கு கத்திக்குத்து


முன்விரோதத்தில் ஜல்லிக்கட்டு வீரருக்கு கத்திக்குத்து
x

இலுப்பூர் அருகே முன்விரோதத்தில் ஜல்லிக்கட்டு வீரரை கத்தியால் குத்திய நண்பர்கள் 3 பேர் கோர்ட்டில் சரணடைந்தனர்.

புதுக்கோட்டை

மது அருந்தினர்

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள காஞ்சிராம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் சுரேஷ்குமார் (வயது 29). இவர், கூலி வேலைக்கு சென்று வந்து அதில் கிடைக்கும் பணத்தை வைத்து கடையில் சாப்பிட்டு வந்துள்ளார். மேலும் பல்வேறு ஊர்களுக்கு சென்று ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டு மாடு பிடி வீரராகவும் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் கலந்து கொள்ளும் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகளை அடக்குவதில் நண்பர்கள் சிலருடன் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுரேஷ்குமார் மற்றும் அவரது நண்பர்களான மாத்தூரை சேர்ந்த கார்த்தி (19), அசோக்குமார் (19), அஜய் (27) ஆகிய 4 பேரும் இலுப்பூரில் மது அருந்தி உள்ளனர்.

ஜல்லிக்கட்டு வீரருக்கு கத்திக்குத்து

பின்னர் அவர்கள் 4 பேரும் இலுப்பூரில் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களில் மாத்தூருக்கு சென்றுள்ளனர். அப்போது இடையில் ஆம்பூர்பட்டி நால்ரோட்டிற்கும் தெற்கு புதுப்பட்டி என்ற ஊருக்கும் இடையில் சென்ற போது அவர்களுக்குள் திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது கார்த்தி, அசோக்குமார், அஜய் ஆகிய 3 பேரும் சேர்ந்து தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுரேஷ்குமாரின் தலை முதுகு கை உள்ளிட்ட இடங்களில் பலமாக குத்தி கீழே சாய்த்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவரை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நண்பர்கள் 3 பேர் கோர்ட்டில் சரண்

இதுகுறித்து தகவல் அறிந்த மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது அங்கு படுகாயம் அடைந்த சுரேஷ்குமாரின் விரல் ஒன்று துண்டாகி கிடந்துள்ளது. மேலும் அதே இடத்தில் சுரேஷ்குமாரை குத்த பயன்படுத்தப்பட்ட கத்தியும் கிடந்தது. தொடர்ந்து அவற்றை போலீசார் கைப்பற்றி இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை கோர்ட்டில் கார்த்தி, அசோக்குமார், அஜய் ஆகிய 3 பேரும் நேற்று மதியம் சரணடைந்தனர்.


Next Story