ஒரு கிலோ தக்காளி விழுப்புரத்தில் ரூ.80, கள்ளக்குறிச்சியில் ரூ.90-க்கு விற்பனை


ஒரு கிலோ தக்காளி விழுப்புரத்தில் ரூ.80, கள்ளக்குறிச்சியில் ரூ.90-க்கு விற்பனை
x
தினத்தந்தி 27 Jun 2023 12:15 AM IST (Updated: 27 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வரத்து குறைவால் தக்காளி விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி விழுப்புரத்தில் ரூ.80-க்கும் கள்ளக்குறிச்சியில் ரூ.90-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

கள்ளக்குறிச்சி

விழுப்புரம்

தக்காளி விலை உயர்வு

விழுப்புரத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது இரு மடங்காக உயர்ந்து நேற்று முதல் ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து கிலோ ரூ.10 முதல் ரூ.20-க்கு விற்பனை செய்த நிலையில் தற்போது கிடுகிடுவென உயர்ந்துள்ளது ஒட்டுமொத்த ஏழை, எளிய மக்களையும், இல்லத்தரசிகளையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

வரத்து குறைவு

தக்காளியின் திடீர் விலையேற்றம் குறித்து விழுப்புரத்தைச் சேர்ந்த காய்கறி வியாபாரிகள் கூறுகையில், விழுப்புரம் நகருக்கு தினந்தோறும் ஆந்திரா மாநிலத்தில் இருந்து லாரிகள் மூலம் தக்காளி லோடு வருவது வழக்கம். தற்போது ஆந்திரா மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருவதால் அங்கு விளைச்சலாகும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் வரத்து கடந்த 3 நாட்களாக குறைந்து காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக நாள் ஒன்றுக்கு 70 முதல் 75 டன் வரை தக்காளி லோடு வரும். ஆனால் தற்போது வரத்து குறைந்து இன்று (நேற்று) 30 டன் தக்காளி லோடு மட்டுமே வந்துள்ளது. இவ்வாறு தக்காளி வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை உயர்ந்துள்ளது.

இன்னும் விலை உயரும்

கடந்த 3 நாட்களுக்கு முன்பு 25 கிலோ தக்காளி ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று ரூ.1,700 ஆக உயர்ந்துள்ளது. அதுபோல் கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்த நிலையில் இருமடங்காக உயர்ந்து ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளியின் வரத்து குறைய, குறைய இன்னும் விலை உயர வாய்ப்புள்ளது. இன்னும் ஓரிரு வாரங்கள் இந்த விலையேற்றம் நீடிக்கலாம்.

அதுபோல் கேரட், பீன்ஸ், பீட்ரூட் ஆகிய காய்கறிகளின் விலையும் கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை உயர்ந்துள்ளது என்றனர்.

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டில் 2 நாட்களுக்கு முன்பு ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி நேற்று ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் கள்ளக்குறிச்சியில் ஒருகிலோ தக்காளி ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இது குறித்து இல்லத்தரசிகள் கூறுகையில், கடந்த 4 வாரங்களுக்கு முன்பு 4 கிலோ தக்காளி ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. பின்னர் படிப்படியாக தக்காளி விலை உயர்ந்து தற்போது ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சமையலில் முக்கிய பங்குபெறும் தக்காளியை கிலோ கணக்கில் வாங்கி பயன்படுத்தி வந்தோம். தற்போது விலை உயர்ந்துள்ளதால் குறைவாக வாங்குகிறோம். தக்காளி விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story