தூத்துக்குடியில் கூலித் தொழிலாளி வெட்டிக் கொலை - பழிக்குப் பழியாக நடந்த சம்பவம்


தூத்துக்குடியில் கூலித் தொழிலாளி வெட்டிக் கொலை - பழிக்குப் பழியாக நடந்த சம்பவம்
x
தினத்தந்தி 22 Oct 2023 4:19 PM IST (Updated: 22 Oct 2023 5:59 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பழிக்கு பழியாக கூலித் தொழிலாளி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி-பாளையங்கோட்டை ரோட்டில் மையவாடி அமைந்து உள்ளது. இதில் உள்ள 4-வது மையவாடி பகுதியில் ஒருவரது உடல், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ், இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றினர்.

உடலில் துண்டிக்கப்பட்ட தலை அந்த பகுதியில் கிடக்கிறதா என்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, மையவாடிக்கு அருகே உள்ள சலவைத்துறை பகுதியில் துண்டிக்கப்பட்ட தலையை போலீசார் கண்டுபிடித்தனர். உடனடியாக தலை மற்றும் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் தூத்துக்குடி மில்லர்புரம் ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த சுமைதூக்கும் தொழிலாளி மாரியப்பன்(வயது 42) என்பது தெரியவந்தது. இவர் கடந்த மே மாதம் 23-ந்தேதி அண்ணாநகர் சலவைக்கூடத்தில், தனது நண்பர் அண்ணாநகரை சேர்ந்த சப்பாணிமுத்து(43) என்பவருடன் மது குடித்து உள்ளார். அப்போது, சப்பாணிமுத்து, மாரியப்பன் கழுத்தில் அணிந்து இருந்த மாலையை அறுத்து விட்டதாகவும், அவரது தாயை பற்றி அவதூறாக பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதில் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், அருகில் கிடந்த கல்லை தூக்கி சப்பாணிமுத்து தலையில் போட்டு கொலை செய்து விட்டு தென்பாகம் போலீஸ் நிலையத்தில் மாரியப்பன் சரண் அடைந்தார். இதைத் தொடர்ந்து அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் மாரியப்பன் சமீபத்தில் ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். இதனை கண்காணித்த சப்பாணிமுத்துவுக்கு ஆதரவானவர்கள் பழிக்கு பழியாக மாரியப்பனை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

அதன்படி இன்று காலையில் மாரியப்பன் மையவாடி பகுதியில் இயற்கை உபாதையை கழிக்க சென்றபோது, அங்கு வந்த மர்ம ஆசாமிகள் 3 பேர், மாரியப்பனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு, தலையை துண்டித்து உள்ளனர். அந்த தலையை சப்பாணிமுத்து கொலை செய்யப்பட்ட அண்ணாநகர் சலவைக்கூடத்தில் உள்ள கோவில் முன்பு வைத்து விட்டு சென்று இருப்பது தெரியவந்தது.

இது குறித்து தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாரியப்பனை கொலை செய்தவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். பழிக்கு பழியாக நடந்த இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story