வைகாசி விசாகத்தையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்


வைகாசி விசாகத்தையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 13 Jun 2022 3:16 PM GMT (Updated: 13 Jun 2022 4:20 PM GMT)

வைகாசி விசாக திருநாளை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் திரண்டு வந்து அலகு குத்தி, காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தி வழிபட்டனர்.

வைகாசி விசாகம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 5-ஆம் படை வீடாக போற்றப்படும் திருத்தலமாகும். இக்கோவிலில் நேற்று வைகாசி விசாகம் தினத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

வைகாசி விசாகம் என்பது முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும். வைகாசி மாதத்தில் உள்ள விசாக நட்சத்திரத்தில் வரும் சிறப்பு நாள் இதுவாகும். விசாகம் என்பது ஆறு நட்சத்திரங்கள் ஒன்று கூடியதென்றும் இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பதும் ஐதீகம். முருகன் அவதரித்த இந்த வைகாசி விசாக நாளில் முருகனின் ஆறுபடை வீடுகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். விசாக தினத்தன்று முருகனை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

பக்தர்கள் தரிசனம்

நேற்று வைகாசி விசாக தினத்தை முன்னிட்டு மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு பால், தயிர், பழம், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள், இளநீர், போன்ற திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு ஆராதனை பிறகு தங்க கவச அலங்காரத்தில் மூலவர் முருகப் பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு வைகாசி விசாகம் நடைபெறுவதால் திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்து வந்து நேர்த்தி கடனை செலுத்தி முருகப்பெருமானை வழிபட்டனர்.

இதனால், பொதுவழியில், பக்தர்கள் நீண்ட வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். அதே போல் 100 மற்றும் 150 ரூபாய் சிறப்பு தரிசன கட்டண டிக்கெட் பெற்ற பக்தர்கள், 1 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.

சிறுவாபுரி முருகன் கோவில்

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்றழைக்கப்படும் சிறுவாபுரியில் பாலசுப்பிரமணிய சாமி கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை ஆகிய நாட்களில் தொடர்ந்து ஆறு வாரங்களுக்கு தொடர்ந்து வந்தால் தங்களது வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். மேலும், இக்கோவிலுக்கு ஆடி கிருத்திகை, வைகாசி விசாகம் உள்ளிட்ட முருகப்பெருமானுக்கு உகந்த நாட்களில் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்துவார்கள். இந்நிலையில், நேற்று வைகாசி விசாகம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.


Next Story