ராஜஸ்தானில் இயற்றப்பட்ட வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டம் போல தமிழகத்திலும் சட்டம் இயற்ற வேண்டும் - அண்ணாமலை


ராஜஸ்தானில் இயற்றப்பட்ட வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டம் போல தமிழகத்திலும் சட்டம் இயற்ற வேண்டும் - அண்ணாமலை
x

ராஜஸ்தான் மாநிலத்தில் இயற்றப்பட்ட, வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டம் போல தமிழகத்திலும் சட்டம் இயற்ற வேண்டும் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை,

ராஜஸ்தான் மாநிலத்தில் இயற்றப்பட்ட, வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டம் போல தமிழகத்திலும் சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

"சென்னை பெருங்குடியில், வழக்கறிஞர் ஜெய்கணேஷ் என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி வழக்கறிஞர் முத்துக்குமார், அரியலூர் வழக்கறிஞர் சாமிநாதன், தர்மபுரி வழக்கறிஞர் சிவக்குமார் என தொடர்ந்து வழக்கறிஞர்கள் மீதான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டு வருகின்றன.

திறனற்ற திமுக ஆட்சியில் சமூக விரோதிகள் சிறிதும் பயமின்றி உலாவிக் கொண்டிருக்கின்றனர். சட்டத்தைக் காப்பாற்றும் வழக்கறிஞர்களுக்கே இங்கு பாதுகாப்பில்லை. காவல்துறை துரிதமாக நடவடிக்கை எடுத்தாலும், தொடரும் இது போன்ற குற்றங்கள் பொதுமக்களிடையே நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி வருகிறது.

திமுக அரசு சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்துவதோடு மட்டுமல்லாமல், உடனடியாக சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் இயற்றப்பட்ட, வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டம் போல தமிழகத்திலும் சட்டம் இயற்ற வேண்டும்.

வழக்கறிஞர்களுக்கு எதிரான குற்றங்கள் கடுமையாகக் கையாளப்பட வேண்டும். வழக்கறிஞர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்குமான சட்டப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.


Next Story