ஊட்டியில் விடுதியில் புகுந்து வளர்ப்பு நாயை வேட்டையாடிய சிறுத்தை
ஊட்டி தனியார் தங்கும் விடுதியில் மின்னல் வேகத்தில் நுழைந்த சிறுத்தை அங்கிருந்த வளர்ப்பு நாயை வேட்டையாடி சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஊட்டி
ஊட்டி தனியார் தங்கும் விடுதியில் மின்னல் வேகத்தில் நுழைந்த சிறுத்தை அங்கிருந்த வளர்ப்பு நாயை வேட்டையாடி சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வனவிலங்குகள் நடமாட்டம்
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் 65 சதவீதம் வனப்பகுதியை கொண்டு உள்ளது. சமீப நாட்களாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை, கரடி, காட்டெருமை, புலி, யானை உள்ளிட்ட வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் அதிகமாக உலா வருகிறது. குறிப்பாக மஞ்சூர் பகுதியில் கரடி மற்றும் காட்டெருமைகளும், கூடலூர் பகுதியில் காட்டுயானைகளும், ஊட்டியில் புலி மற்றும் சிறுத்தை நடமாட்டமும் அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் ஊட்டியில் உள்ள தமிழகம் விருந்தினர் மாளிகை, ரோஸ் மவுண்ட், சர்ச்ஹில் பகுதிகளில் கடந்த சில நாட்களாக சிறுத்தை ஒன்று நடமாடி வருகிறது. இந்த சிறுத்தை இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வளர்ப்பு நாய்கள் மற்றும் பூனைகளை வேட்டையாடுவதை வழக்கமாக கொண்டு உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் கடந்த சில நாட்களாக கடும் அச்சத்தில் இருந்தனர்.
நாயை வேட்டையாடியது
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஊட்டி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் வளர்க்கப்பட்டு வரும் வளர்ப்பு நாயை வேட்டையாடுவதற்காக சிறுத்தை ஒனறு தடுப்புச் சுவரை தாண்டி உள்ளே நுழைந்து, விடுதி வளாகத்தை நோட்டமிட்டது. இதை பார்த்த நாய் அங்கிருந்து தப்பிக்க வேகமாக ஓடியது. ஆனாலும் மின்னல் வேகத்தில் நாயை, சிறுத்தை வேட்டையாடி கவ்வி சென்றது.
இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனால் மேலும் பீதி அடைந்துள்ள அந்த பகுதி மக்கள், குடியிருப்பு பகுதிக்குள் நடமாடி வரும் சிறுத்தையை கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.