ஆட்டை அடித்து கொன்ற சிறுத்தை


ஆட்டை அடித்து கொன்ற சிறுத்தை
x
தினத்தந்தி 22 Aug 2023 3:30 AM IST (Updated: 22 Aug 2023 3:30 AM IST)
t-max-icont-min-icon

பந்தலூர் அருகே சிறுத்தை ஆட்டை அடித்து கொன்றது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

நீலகிரி

பந்தலூர்

பந்தலூர் அருகே சிறுத்தை ஆட்டை அடித்து கொன்றது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

சிறுத்தை உலா

பந்தலூர் அருகே சேரங்கோடு டேன்டீ ரேஞ்ச் எண்.2 திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் நடராஜ். இவர் வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் ஆடுகள் மேய்ச்சலுக்கு சென்றன. அதில் ஒரு ஆடு மட்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து நடராஜ் சென்று பார்த்த போது, ஆட்டை சிறுத்தை அடித்து கொன்றது தெரியவந்தது. தொடர்ந்து இரவில் திருவள்ளுவர் நகர், படச்சேரி, சிங்கோனா உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை ஒட்டி சிறுத்தை நடமாடியது.

இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். மேலும் தேயிலை தோட்டத்தில் சிறுத்தை உலா வந்தது. இதனால் தொழிலாளர்கள் பீதி அடைந்து ஓட்டம் பிடித்தனர். ஊருக்குள் புகுந்து ஆட்டை கொன்று விட்டு தொடர்ந்து நடமாடி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

பிடிக்க வேண்டும்

இதைத்தொடர்ந்து சேரம்பாடி வனச்சரகர் அய்யனார், வனவர் ஆனந்த், வனகாப்பாளர் குணசேகரன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த ஆட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் தேயிலை தோட்டங்கள், வனப்பகுதிக்குள் சிறுத்தை பதுங்கி உள்ளதா என்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதையடுத்து கூடலூர் வன கோட்ட அலுவலர் கொம்மு ஓம்காரம், உதவி வன பாதுகாவலர் கருப்புசாமி ஆகியோர் உத்தரவின் படி, திருவள்ளுவர் நகர் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையினர் டிரோன் மூலம் கண்காணித்து வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, சிறுத்தை அடிக்கடி ஊருக்குள் புகுந்து கால்நடைகள், வளர்ப்பு நாய்களை வேட்டையாடி வருகிறது. தேயிலை தோட்டங்களுக்குள்ளும் புகுந்து விடுகிறது. தொடர்ந்து அட்டகாசம் செய்து வருவதால் சிறுத்தையை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story