கோழியை கடித்து கொன்ற சிறுத்தை

கோழியை கடித்து கொன்ற சிறுத்தையால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
பந்தலூர்
பந்தலூர் அருகே சேரங்கோடு டேன்டீ ரேஞ்ச் எண்.2 திருவள்ளுவர் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுத்தை புகுந்து தெரு நாய்களை கடித்து கொன்றது. சேரங்கோடு டேன்டீ தோட்டத்திற்கு புகுந்து தொழிலாளர்களை துரத்தியது. இதனால் தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து சேரம்பாடி வனச்சரகர் அய்யனார், வனவர் ஆனந்த், வன காப்பாளர் குணசேகரன் மற்றும் வனத்துறையினர் டிரோன் மூலம் சிறுத்தையை தேடி வந்தனர். ஆனால், சிறுத்தை தென்படவில்லை. இந்தநிலையில் நேற்று முன்தினம் படச்சேரி பகுதியை சேர்ந்த தேவதாஸ் என்பவரது கோழிகள் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த சிறுத்தை கோழியை கடித்து கொன்றது. இதை பார்த்த பொதுமக்கள் கூச்சலிட்டனர். இதனால் கோழியை அங்கேயே போட்டு விட்டு சிறுத்தை ஓடியது. இதன் காரணமாக பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். எனவே, சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.






