கட்டுப்பாட்டை இழந்த லாரி மின்கம்பத்தில் மோதி விபத்து

வால்பாறை- பொள்ளாச்சி மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
வால்பாறை
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இருந்து வால்பாறைக்கு லாரி ஒன்று வந்தது. லாரியை அன்பு (வயது 32) என்பவர் ஓட்டி வந்தார். பின்னர் இந்த லாரியில் விறகு ஏற்றிக்கொண்டு பொள்ளாச்சியை நோக்கி புறப்பட்டது. வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் அய்யர்பாடி எஸ்டேட் தபால்நிலையம் அருகே வந்தபோது லாரி கட்டுப்பாட்டை இழந்து, வால்பாறை நோக்கி வந்த அரசு பஸ் மீது உரசி, சாலையோரத்தில் இருந்து மின்கம்பத்தின் மீது மோதியது.
இதில் அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. மின்கம்பம் முறிந்து விழுந்தது. இதன்காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வால்பாறை போலீசார், அய்யர்பாடி மின்வாரியத்தினர் உடனடியாக சாலையில் கிடந்த மின்கம்பத்தை அகற்றி போக்குவரத்து சரிசெய்தனர்.
இதையடுத்து போக்குவரத்து சீரானது. வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் தொடர்ந்து விபத்துகள் நடைபெற்று வருவதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தினர்.






