எடப்பாடி அருகே காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை-உதவி கலெக்டர் விசாரணை
எடப்பாடி அருகே காதல் திருமணம் செய்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது இறப்பு குறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
Heading
Content Area
எடப்பாடி:
காதல் திருமணம்
எடப்பாடி ஒன்றியம் செட்டிமாங்குறிச்சி ஊராட்சி சின்ன தாண்டவனூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் குமார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு செட்டிமாங்குறிச்சி பகுதியை சேர்ந்த லிங்கம்மாள் (வயது 22) என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு கனிஷ்கா என்ற ஒரு வயது பெண் குழந்தை உள்ளது.
இந்தநிலையில் சந்தோஷ் குமார், வேலைக்கு எதுவும் செல்லாமல் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்து காணப்பட்ட லிங்கம்மாள், நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், விவசாய பயன்பாட்டிற்கான பூச்சி கொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே வீட்டுக்கு வந்த அவரது உறவினர்கள் மயங்கி கிடந்த அவரை மீட்டு எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அங்கு லிங்கம்மாளை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதை உறுதி செய்தனர்.
உதவி கலெக்டர் விசாரணை
இதையடுத்து லிங்கம்மாளின் தாயார் மணி, தனது மகளின் சாவு குறித்து எடப்பாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் லிங்கம்மாள் உயிர் இழந்ததால் அவரது இறப்பு குறித்து சங்ககிரி உதவி கலெக்டர் (பொறுப்பு) வீர் பிரதாப் சிங் விசாரணை நடத்தி வருகிறார்.