போலீசுக்கு பயந்து விஷம் குடித்த காதலன்
சிறுமி பலாத்கார வழக்கில் போலீசுக்கு பயந்து காதலன் விஷம் குடித்தார். சிகிச்சைக்கு பிறகு அவரை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி
சிறுமி பலாத்கார வழக்கில் போலீசுக்கு பயந்து காதலன் விஷம் குடித்தார். சிகிச்சைக்கு பிறகு அவரை போலீசார் கைது செய்தனர்.
சிறுமி கர்ப்பம்
பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை காணவில்லை என்று தாலுகா போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில், சிறுமியை காணவில்லை என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையில் சிறுமி வீட்டிற்கு திரும்பி வந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது, திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான விக்னேஷ் (வயது 20) என்பவரும், சிறுமியும் காதலித்து வந்தனர். அவர்கள் நெருங்கி பழகியதால், சிறுமி கர்ப்பமானார். இதை தனது தாத்தா சின்னசாமியிடம்(55) கூறினார். அவர், சிறுமிக்கு மாத்திரை வாங்கி கொடுத்து கர்ப்பத்தை கலைத்ததாக தெரிகிறது.
பலாத்காரம்
பின்னர் திருநீறு வைப்பதாக கூறி அந்த பகுதியை சேர்ந்த அர்ஜூனன்(60) என்பவரிடம் அழைத்து சென்று, அங்கு சிறுமியை மிரட்டி சின்னசாமி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு அர்ஜூனன் உடந்தையாக இருந்தார்.
இதனால் விரக்தி அடைந்த சிறுமி, காதலனிடம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறினார். பின்னர் அவர்கள், திருமணம் செய்து கொள்ள பழனிக்கு சென்று, அங்கு ஈஸ்வரன் என்பவரது வீட்டில் தங்கினர். அவரை காணாததால் போலீசில் பெற்றோர் புகார் அளித்தது விசாரணையில் தெரியவந்தது.
விஷம் குடித்தார்
இதையடுத்து விக்னேஷ், சின்னசாமி, அர்ஜூனன் ஆகியோர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சிறுமி என்று தெரிந்தும் அடைக்கலம் கொடுத்ததாக ஈஸ்வரன் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் சின்னசாமி, அர்ஜூனன், ஈஸ்வரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் காதலன் விக்னேஷ் போலீஸ் விசாரணைக்கு பயந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது. இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்ததும் போலீசார் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.