இருளில் மூழ்கி கிடக்கும் நாகை தற்காலிக பஸ் நிலையம்
நாகை தற்காலிக பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இன்றி பெண்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மின்விளக்குகள் இன்றி இருளில் மூழ்கி கிடக்கிறது. இங்கு மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை தற்காலிக பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இன்றி பெண்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மின்விளக்குகள் இன்றி இருளில் மூழ்கி கிடக்கிறது. இங்கு மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்காலிக பஸ் நிலையம்
நாகை மாவட்டம் புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயம், நாகூர் ஆண்டவர் தர்கா, சிக்கல் சிங்காரவேலர் கோவில் உள்ளிட்ட மும்மத ஆலயங்கள் அமைந்த ஆன்மிக சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இதனால் வெளியூர், வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமானோர் நாகைக்கு வந்து செல்கின்றனர்.
இதனால் நாகை புதிய பஸ் நிலையம் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் நாகை புதிய பஸ் நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. அருகில் உள்ள அவுரி திடலில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தற்காலிக பஸ் நிலையத்தில் தினமும் நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன.
இருளில் மூழ்கி கிடக்கிறது
இந்த பஸ் நிலையத்தில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. குறிப்பாக மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் இருளில் மூழ்கி கிடக்கிறது.போதிய இடவசதி இல்லாததால் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுகிறது. மின்விளக்கு இல்லாததை பயன்படுத்தி இரவு நேரத்தில் பஸ் நிலையத்துக்கு வரும் பெண் பயணிகளிடம் மர்ம நபர்கள் வழிப்பறியில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தற்காலிக பஸ் நிலையத்தை மாற்றியதால், எந்த பஸ் எந்த இடத்தில் நிற்கும் என்பது தெரியாமல் பயணிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
வெளியூரிலிருந்து நாகைக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே நாகை அவுரி திடலில் செயல்பட்டு வரும் தற்காலிக பஸ் நிலையத்தில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.
இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-
முன்னறிவிப்பு இன்றி மாற்றப்பட்டுள்ளது
நாகை சோ்ந்த மணி:- நாகை புதிய பஸ் நிலையம் கடந்த 40 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி திடீரென பஸ் நிலையம் மாற்றப்பட்டுள்ளது. சாலையின் குறுகிய வளைவு பகுதியில் தற்காலிக பஸ் நிலையம் மாற்றப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
குறிப்பாக மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பெண்கள், முதியவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பஸ்கள் எந்த வழித்தடத்தில் செல்கின்றன என பயணிகளுக்கு தெரிவிக்க வேண்டும். போக்குவரத்தையும் சீர் செய்ய வேண்டும் என்றார்.
மின்விளக்குகள் பொருத்த வேண்டும்
கல்லூரி மாணவி லாவண்யா:- தற்காலிக பஸ் நிலையத்தில் குடிநீர், கழிவறை, பயணிகள் நிற்பதற்கான நிழற்குடைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இதன்காரணமாக முதியவர்கள், கைக்குழந்தையுடன் வருபவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் பஸ் நிலையத்திற்கு வரவே அச்சமாக உள்ளது.
கிராமப்புறத்தில் இருந்து வரும் பெண்களுக்கு தாங்கள் செல்லும் பஸ்கள் எந்த இடத்தில் இருக்கிறது என்று தெரியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே தற்காலிக பஸ் நிலையத்தில் தேவைப்படும் இடங்களில் மின் விளக்குகள், குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்றார்.