வீட்டை வாடகைக்கு விடுவதாக ரூ.50 லட்சம் மோசடி செய்தவர் கைது


வீட்டை வாடகைக்கு விடுவதாக ரூ.50 லட்சம் மோசடி செய்தவர் கைது
x

வீட்டை வாடகைக்கு விடுவதாக கூறி ரூ.50 லட்சம் மோசடி செய்த தரகரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரம், ஆதி நகரை சேர்ந்தவர் தங்கராஜ்(வயது 37). வீட்டு தரகரான இவர், சென்னை புறநகர் பகுதியான தாம்பரம், பல்லாவரம், சிட்லப்பாக்கம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் காலியாக உள்ள வீட்டு உரிமையாளர்களை தொடர்பு கொண்டு தன்னிடம் வாடகைக்கு ஆள் உள்ளது என கூறினார்.

பின்னர் நீங்கள் கூறும் மாத வாடகையில் ஆயிரம் ரூபாயை கூடுதலாக கூறி, வாடகைதாரர்களிடம் இருந்து அதனை தான் பெற்றுக்கொள்வதாக வீட்டு உரிமையாளர்களிடம் கூறி ஒப்பந்தம் செய்தார். பின்னர் அந்த வீடுகளை ஆன்லைன் மூலம் வாடகை மற்றும் குத்தகைக்கு கிடைக்கும் என விளம்பரம் செய்தார்.

அந்த விளம்பரத்தை பார்த்து பலர் தங்கராஜை தொடர்பு கொண்டு, வீடுகளை கேட்டனர். அப்படி வருபவர்களிடம் ஆண்டு குத்தகைக்கு பேசி ரூ.4 முதல் 5 லட்சம் வரை பெற்றுக்கொண்டு வீடுகளை விட்டுள்ளார்.

அதேநேரத்தில் வீடுகளை குத்தகைக்கு விட்டதை உரிமையாளர்களுக்கு தெரியாமல் இருக்க, மாதந்தோறும் தானே வாடகை வாங்கி கொடுப்பது போல் பணம் கொடுத்துள்ளார்.

தொடர்ச்சியாக சில மாதங்கள் பணம் கொடுத்து வந்த தங்கராஜ் இடையில் அப்படியே நிறுத்திவிட்டார். குத்தகை முடிந்தவர்களுக்கும் பணத்தையும் திருப்பி தரவில்லை. இதேபோல் ஏராளமானவர்களிடம் மோசடி செய்து ரூ.50 லட்சம் வரை ஏமாற்றியுள்ளார்.

இந்த நிலையில் இவரிடம் ஏமாற்றம் அடைந்த 15-க்கும் மேற்பட்ட வீட்டு உரிமையாளர்கள், குத்தகைதாரர்கள் சேர்ந்து சில நாட்களுக்கு முன்பு சேலையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கராஜை நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story