கத்தியை காட்டி வாலிபரிடம் பணம் பறிக்க முயன்றவர் கைது
ராமநாதபுரத்தில் கத்தியை காட்டி வாலிபரிடம் பணம் பறிக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் புளிக்காரத்தெருவை சேர்ந்த மலைராஜன் என்பவரின் மகன் முகேஷ் (வயது 31). இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு விபத்தில் பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் ராமநாதபுரம் சின்னக்கடை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் குடிபோதையில் தகராறு செய்து கொண்டிருந்த பாம்பூரணி அப்துல்ரகுமான் மகன் முகம்மது ரிசாஸ் (27) என்பவர் முகேசை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றுள்ளார். அவர் தான் எந்த வேலைக்கும் செல்லாமல் உள்ளதால் பணம் இல்லை என்று கூறவே ஆத்திரமடைந்த முகம்மது ரிசாஸ் கத்தியை காட்டி மிரட்டி குத்த வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த முகேஷ் கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பிடிக்க முயன்றபோது தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து முகேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து முகம்மது ரிசாசை கைது செய்தனர்.