மயிலாடுதுறையில் விரைவில் மருத்துவக்கல்லூரி தொடங்கப்படும்


மயிலாடுதுறையில் விரைவில் மருத்துவக்கல்லூரி தொடங்கப்படும்
x
தினத்தந்தி 18 Aug 2023 12:15 AM IST (Updated: 18 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு ஒப்புதல் பெற்று மயிலாடுதுறையில் விரைவில் மருத்துவக்கல்லூரி தொடங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மயிலாடுதுறை

மத்திய அரசு ஒப்புதல் பெற்று மயிலாடுதுறையில் விரைவில் மருத்துவக்கல்லூரி தொடங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

குடற்புழு நீக்க நாள்

தேசிய குடற்புழு நீக்க நாளான நேற்று 1 முதல் 19 வயதுடையவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் திட்டத்தை மயிலாடுதுறையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கினார். மயிலாடுதுறை எம்.பி., ராமலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் ராஜகுமார், நிவேதா முருகன், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, மயிலாடுதுறை அரசு பெரியார் தலைமை ஆஸ்பத்திரியில் ரூ.7.18 கோடி மதிப்பில் புதிய எம்.ஆர்.ஐ. ஸ்கேன் நிறுவப்பட்டதை அமைச்சர் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

ரூ.45 கோடியில் புதிய கட்டிடம்

தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்கேன் அமைப்பில் பிளைன் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க ரூ.2 ஆயிரத்து 500, கான்ட்ராஸ்ட் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க ரூ.4 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை முதல்-அமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திலும் பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை அரசினர் ஆஸ்பத்திரி மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு, ரூ.45.50 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், சீர்காழியில் ரூ.24.25 கோடி மதிப்பீட்டில் 50 படுக்கை அறைகள் கொண்ட அவசர சிகிச்சை கட்டிடம், 16 படுக்கை அறைகள் கொண்ட கண் அறுவை சிகிச்சை அரங்கு கட்டிடம் உள்பட ரூ.75.98 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவ துறை சம்பந்தப்பட்ட கட்டிடங்கள் கட்டும் பணிகள் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகின்றது.

மயிலாடுதுறையில் மருத்துவக்கல்லூரி

தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவத்துறை பணியாளர்கள் பற்றாக்குறையை நீக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக்கல்லூரி என்ற வகையில், விடுபட்டுள்ள மயிலாடுதுறை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் விரைவில் மத்திய அரசின் ஒப்புதல் பெற்று மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும்.

கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசின் 478 மருத்துவத்துறை விருதுகளை தமிழக அரசு பெற்றுள்ளது. இதில் சரிபாதியை அதாவது 239 விருதுகளை கடந்த ஒரு ஆண்டில் மட்டும் பெற்று தற்போதைய அரசு சாதனை படைத்துள்ளது என்றார். தொடர்ந்து மருத்துவமனையில் நடைபெற்றுவரும் கூடுதல் கட்டிடம் கட்டுமானப் பணியை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

'ஹெல்த் வாக்'

முன்னதாக, தமிழ்நாட்டில் விரைவில் தொடங்கப்படவுள்ள "ஹெல்த் வாக்;' நடப்போம் நலம்பெறுவோம் என்ற திட்டத்தின்கீழ் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் முதல் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை நடைபயிற்சி மேற்கொள்வதற்கான நடைபாதையை தேர்வு செய்து உறுதிப்படுத்துவதற்கான ஆய்வினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிகாலையில் 4 கி.மீ தூரம் நடந்து சென்று மேற்கொண்டார்.

நிகழ்ச்சியில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் செல்வவிநாயகம், கூடுதல் இயக்குனர் சோமசுந்தரம், மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, சுகாதாரத்துறை இணை இயக்குநர் எஸ்.குருநாதன் கந்தையா, துணை இயக்குநர் அஜித் பிரபுகுமார், உதவி கலெக்டர் யுரேகா, நகரசபை தலைவர் செல்வராஜ், ஒன்றியக்குழுத் தலைவர் காமாட்சிமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story