தடுப்பு சுவரில் மோதி சாலையில் கவிழ்ந்த மினி சரக்குவேன் - சமையல் எண்ணெய் கொட்டியதால் போக்குவரத்து பாதிப்பு


தடுப்பு சுவரில் மோதி சாலையில் கவிழ்ந்த மினி சரக்குவேன் - சமையல் எண்ணெய் கொட்டியதால் போக்குவரத்து பாதிப்பு
x

தடுப்பு சுவரில் மோதி மினி சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்தது. அதில் இருந்த சமையல் எண்ணெய் சாலையில் கொட்டியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சென்னை

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் இருந்து சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளை ஏற்றிக்கொண்டு சென்னை மயிலாப்பூருக்கு மினி சரக்கு வேன் வந்தது. அதனை டிரைவர் அருண் ஓட்டினார். சென்னை வண்ணாரப்பேட்டை பழைய சிறைச்சாலை சாலையில் ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மகளிர் விடுதி அருகில் உள்ள மேம்பாலத்தில் இருந்து இறங்கும்போது சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மினி சரக்கு வேன் மோதி சாலையில் கவிழ்ந்தது.

இதில் மினி சரக்கு வேன் நொறுங்கியதுடன், அதில் இருந்த சுமார் 3 டன் சமையல் எண்ணெய் பாக்கெட்டுகள் சாலையில் கொட்டியது. அதில் சில பாக்கெட்டுகள் கிழிந்ததால் சாலையில் சமையல் எண்ணெய் வழிந்தோடியது.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் காசியப்பன் தலைமையிலான போலீசார் சாலையில் கொட்டி கிடந்த சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளை சாலையோரமாக அப்புறப்படுத்தினர். மேலும் சாலையில் கவிழ்ந்து கிடந்த மினி சரக்கு வேனையும் மற்றொரு வாகனத்தில் கட்டி இழுத்து அப்புறப்படுத்தினர்.

சமையல் எண்ணெய் சாலையில் கொட்டியதால் பிசுபிசுப்பாக இருந்த இடத்தில் மண்ணை கொட்டி சரி செய்தனர். இந்த விபத்தில் டிரைவர் அருண் லேசான காயமும், அவருடன் வந்த கண்ணன் என்பவருக்கு தலையில் காயமும் ஏற்பட்டது. இருவரும் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த சாலையில் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனால் ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு வந்த நோயாளிகள் மற்றும் அந்த வழியாக துறைமுகம், ராயபுரம் பகுதிகளுக்கு சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.


Next Story