சிவகங்கை அருகே வீட்டில் மோதி நின்ற மினிபஸ்
ஆட்டோ மீது மோதாமல் இருக்க திருப்பியபோது வீட்டின் மீது மினிபஸ் மோதியது.
வீட்டின் மீது மோதியது
சிவகங்கை அருகே உள்ள வேம்பங்குடி கிராமத்தில் இருந்து மினிபஸ் சிவகங்கை நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த மினி பஸ்சை கார்த்திகை ராஜா(வயது 48) என்பவர் ஓட்டி வந்தார். மினிபஸ் சிவகங்கை-மதுரை முக்குரோடு பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஆட்டோ, மினி பஸ்சின் குறுக்கே வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர், ஆட்டோவின் மீது மோதாமல் இருக்க பஸ்சை வலதுபுறம் திருப்பினார்.
அதில் கட்டுப்பாட்டை இழந்த மினிபஸ் சாலையோரத்தில் இருந்த அழகர்சாமி என்பவருடைய வீட்டின் மீது மோதி நின்றது. இதில் வீட்டின் முன்பகுதி சேதம் அடைந்தது.
பரபரப்பு
இந்த விபத்தின்போது அந்த வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும், இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் முத்துகருப்பன் லேசான காயம் அடைந்தார். விபத்து குறித்து சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.