யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது சிறுபான்மை மக்களுக்கு தெரியும்; துரை வைகோ பேட்டி


யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது சிறுபான்மை மக்களுக்கு தெரியும்; துரை வைகோ பேட்டி
x

யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது சிறுபான்மை மக்களுக்கு தெரியும் என்று துரை வைகோ கூறினார்.

திருச்சி

ம.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

காவிரியில் நமது மரபு உரிமையை நிலை நாட்டவும், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை பாதுகாக்கவும் வலியுறுத்தி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ தலைமை தாங்கினார்.

துணை பொதுச்செயலாளர்கள் முருகன், டாக்டர் ரொகையா, மாநில விவசாய அணி செயலாளர் ராஜேந்திரன், மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, வடக்கு மாவட்ட செயலாளர் டி.டி.சி.சேரன், கவுன்சிலர் அப்பீஸ் முத்துகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து துரை வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

100 நாள் வேலை திட்டம்

தஞ்சையில் 3 லட்சம் ஏக்கரில் குறுவை பயிர்கள் கருகிவிட்டன. காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு தண்ணீரை பெற்றுத்தந்து இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை. 100 நாள் வேலை திட்டத்துக்கு போதிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. 100 நாள் வேலை திட்டத்துக்கு ரூ.2.70 லட்சம் கோடி தேவை. ஆனால் மத்திய அரசு நடப்பாண்டில் ரூ.60 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கி உள்ளது. இப்படியே போனால் இந்த திட்டமே இல்லாத நிலை உருவாகிவிடும். காவிரி நதிநீர் பிரச்சினையில் மாநில அரசு எந்த அளவுக்கு முயற்சி செய்ய வேண்டுமோ? அதை செய்து விட்டது. இனி மத்திய அரசு தான் அழுத்தம் தர வேண்டும். பயிர்கள் கருகி உள்ளதால் ஏக்கருக்கு ரூ.13 ஆயிரம் நிவாரணம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ம.தி.மு.க. கோரிக்கை வைக்கிறது.

பம்பரம் சின்னத்தில் போட்டி

காவிரி விவகாரத்தில் கர்நாடகா அரசு சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மதிக்கவில்லை. எனவே சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து கர்நாடக அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக எங்களின் பம்பரம் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பது தான் எங்களது எண்ணம். கட்சி நிர்வாகிகளின் எண்ணம். முதல்-அமைச்சரும் இதை ஏற்றுக்கொள்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. மதவாத பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. அது தான் மிக முக்கியம். பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியே வந்ததன் காரணமாக சிறுபான்மையினரின் வாக்கு கிடைக்கும் என்கிற ஆசையில் தான் எடப்பாடி இருக்கிறார். ஆனால் இந்த ஒரு மாதத்தில் எல்லாம் எந்தவித மாற்றமும் ஏற்பட்டு விடாது. சிறுபான்மை மக்களுக்கு யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தெரியும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

ஒருமைப்பாடு சீர்குலைந்துவிடும்

இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் துரை வைகோ பேசுகையில், 'ஒரு நதி உருவாகிற இடத்தைவிட அது பாய்கிற இடத்துக்கு தான் அதிக உரிமை இருக்கிறது. அப்படி பார்த்தால் காவிரி நீரை பெறும் உரிமை தமிழகத்துக்கே உள்ளது. காவிரி விவகாரத்தில் மத்திய பா.ஜ.க. அரசு இரட்டை வேடம் போட்டு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. காவிரி நதி நீர் தமிழகத்துக்கு கிடைக்காவிட்டால் இந்தியாவின் ஒருமைப்பாடு சீர்குலைந்துவிடும்' என்று பேசினார். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story