3 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை...!
வத்திராயிருப்பு அருகே 3 குழந்தைகளுடன் கிணற்றில் விழுந்து தாய் தற்கொலை செய்துகொண்டார்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கோட்டையூர் கிராமம் உள்ளது. அந்த கிராமத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மனைவி பாண்டீஸ்வரி. இந்த தம்பதிக்கு வைத்தீஸ்வரி, காளிஸ்வரி என இரு பெண் குழந்தைகளும், விக்னேஷ்வரன் என்ற ஆண் குழந்தையும் உள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன்னர் ஈஸ்வரன் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார்.
ஈஸ்வரனின் பிரிவால் பாண்டீஸ்வரி மிகுந்த மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. கணவர் இல்லாமல் எப்படி குழந்தைகளை வளர்க்கப்போகிறோம்? என்ற பயமும் அவரை வாட்டி வதைத்தது. இதனால் பாண்டீஸ்வரி தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார். தந்தை இறந்து விட்டார். தானும் இறந்து விட்டால் குழந்தைகள் தனியாக வாழ வேண்டும் என்பதால் அவர்களையும் தன்னுடன் கூட்டிச் செல்ல திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் பாண்டீஸ்வரி இன்று தன் குழந்தைகளுடன் அருகில் உள்ள கிணற்றுக்கு சென்றார். பின்னர் தன் 3 குழந்தைகளையும் முதலில் கிணற்றுக்குள் தள்ளிவிட்டார். பின்னர் தானும் கிணற்றினுள் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களினை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.