நயினார்குளம் ரோட்டில் புதிய பாலம் அமைக்க வேண்டும்-கவுன்சிலர்கள் மனு
நயினார்குளம் ரோட்டில் புதிய பாலம் அமைக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கவுன்சிலர்கள் மனு கொடுத்தனர்.
நெல்லை மாநகராட்சி மண்டல தலைவர் மகேசுவரி தலைமையில் கவுன்சிலர்கள் கிட்டு என்ற ராமகிருஷ்ணன், உலகநாதன், மாரியப்பன், ரவீந்திரன், அஜய், ஷேக் மன்சூர் ஆகியோர் நேற்று நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயனை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.
அதில் கூறிஇருப்பதாவது:-
நெல்லை டவுன் ஆர்ச்சில் இருந்து நயினார்குளம் செல்லும் ரோடு போக்குவரத்து அதிகமாக உள்ள ரோடு ஆகும். அந்த பகுதியில் உள்ள கழிவுநீர் நயினார்குளம் தென்கிழக்கு முக்கு வழியாக செல்ல வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. டவுன் மத்திய பகுதியில் உள்ள சத்தியமூர்த்தி தெரு, தெப்பக்குளம் கீழத்தெருவில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையை கடந்து செல்ல வழியில்லை. எனவே மழைக்காலங்களில் தெப்பக்குளம் கீழத்தெரு பகுதியில் தண்ணீர் தேங்கி விடுகிறது. இதை தவிர்க்கும் வகையில், மழைக்காலத்தில் தண்ணீர் வழிந்தோடும் வகையில் நயினார்குளம் ரோட்டில் பெட்ரோல் பங்க் அருகில் நெடுஞ்சாலைத்துறை மூலம் புதிய பாலம் அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறிஉள்ளனர்.