ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்
திருத்துறைப்பூண்டி அருகே பொன்னிறை கிராமத்தில் ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோட்டூர்:
திருத்துறைப்பூண்டி அருகே பொன்னிறை கிராமத்தில் ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேதமடைந்த ரேஷன் கடை
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் பொன்னிறை கிராமத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் 1400 குடும்ப அட்டைதாரர்கள் அரிசி, மண்எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருள்களை வாங்கி வருகிறார்கள். இந்த ரேஷன் கடை கட்டிடம் கட்டி 50ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தற்போது இந்த கட்டிடம் சேதமடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் இந்த ரேஷன் கடையில் கூட்ட நெரிசலில் பொது மக்கள் சிக்கி தவிக்க வேண்டிய அவல நிலை உள்ளது.
பொருட்கள் சேதம்
இது குறித்த இப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-
கிராமப்புறத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க கூடிய ரேசன் கடை கட்டிடம் பழுதடைந்து பல வருடங்களாக உள்ளது. இதில் வைக்க கூடிய ரேஷன் பொருட்கள் மழைநீர் புகுந்து வீணாகுகிறது. மேலும் எலிகள் தொல்லை அதிகமாகி பொருட்களை சேதப் படுத்துகிறது. கட்டிடம் பாழடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழுமோ என்ற அபாயத்தில் உள்ளதால் பொது மக்கள் அச்சப்படுகின்றனர். ரேஷன் கடையின் நிலை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. மேலும் இந்த ரேஷன் கடை கட்டிடம் போக்குவரத்து மிகுந்த சாலை ஓரத்தில் இருப்பதால் ரேஷன் பொருட்கள் வழங்கும் பொழுது கூட்டம் அதிகமாக இருப்பதால் போக்குவரத்து தடை ஏற்படுகிறது . எனவே பொதுமக்கள் அன்றாடம் அத்தியாவசிய பொருளை வாங்க வசதியாக புதிய ரேஷன் கடை கட்டி கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினா்.