ரூ.90 லட்சத்தில் 6 வகுப்பறை கொண்ட புதிய கட்டிடம்

தாமலேரிமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.90 லட்சத்தில் 6 வகுப்பறை கொண்ட புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை நடந்தது.
ஜோலார்பேட்டையை அடுத்த தாமலேரிமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். உயர்நிலைப் பள்ளியாக இருந்த இந்த பள்ளி கடந்த 3 வருடங்களுக்கு முன்பு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதனால் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் பயில்வதற்கு போதுமான வகுப்பறை கட்டிடம் இல்லாமல் இருந்து வந்தது.
இந்தநிலையில் ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. க.தேவராஜி நடவடிக்கை மேற்கொண்டு ரூ.95 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 6 வகுப்பறை கொண்ட கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனிசுப்பராயன் தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் குணசேகரன் வரவேற்றார். உதவி செயற்பொறியாளர் பழனி, முன்னிலை வகித்தார்.
திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அருள்நிதி, பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் தீபா மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.






