சுரப்புன்னை மர காட்டுக்குள் புதிதாக தங்கும் விடுதி


சுரப்புன்னை மர காட்டுக்குள் புதிதாக தங்கும் விடுதி
x
தினத்தந்தி 1 July 2023 6:45 PM GMT (Updated: 1 July 2023 6:46 PM GMT)

பிரச்சாவரத்தில் உள்ள சுரப்புன்னை மர காட்டுக்குள் புதிதாக தங்கும் விடுதி கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்

கடலூர்

பரங்கிப்பேட்டை

பேட்டி

பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பிச்சாவரம் சுற்றுலா மையத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.14 கோடியே 70 லட்சத்தில் 5 ஏக்கர் 40 சென்ட் பரப்பளவில் வாகனங்கள் நிறுத்தும் இடம், தங்கும் அறை, உணவகம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இ்ங்குள்ள சுரப்புன்னை மர காட்டுக்குள் புதிதாக தங்கும் விடுதி கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது இங்கு சுற்றுலா துறையும், வனத்துறையும் இணைந்து படகு சவாரியை செய்து வருகின்றனர். தேவைப்படும் பட்சத்தில் கூடுதலாக படகுகள் வாங்கப்படும்.

விடியல் விழா

எம்.ஜி.ஆர். திட்டு பகுதியில் விடியல் விழா நடத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்காலத்தில் பிச்சாவரம் சிறந்த சுற்றுலா தலமாக மேம்பாடு அடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

தொடர்ந்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறும்போது, பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் ஆற்றுப்பகுதியில் உள்ள பழைய சுற்றுலா விடுதி அறைகளை இடித்து விட்டு முதல்-அமைச்சரின் கவனத்துக்கு எடுத்து சென்று கூடுதல் நிலத்தை பெற்று புதிய விடுதி அறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். உலக நாடுகளிலிருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் இங்கு வருவதால் அதற்கேற்ப சுற்றுலா மையத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு நீர்நிலை சார்ந்துள்ள விளையாட்டுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் நல்ல தங்கும் விடுதிகளுடன் கூடிய சிறந்த சுற்றுலா மையமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் 10 மாதத்தில் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும் என்றார்.


Next Story