தா.பழூரை தலைமை இடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்க வேண்டும்


தா.பழூரை தலைமை இடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

அரியலூர்

தா.பழூர் ஊராட்சி ஒன்றியம்

அரியலூர் மாவட்டத்தில் டெல்டா பாசன பகுதியாக அறியப்படும் தா.பழூர் ஊராட்சி ஒன்றியம் விவசாயத்தையும், அதைச்சார்ந்த தொழில்களையும் முக்கிய தொழில்களாக கொண்ட ஊராட்சி ஒன்றியமாக விளங்குகிறது. தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்தில் 33 கிராம ஊராட்சிகள் அமைந்துள்ளன. வருவாய் துறையின் அடிப்படையில் தா.பழூர் ஊராட்சி ஒன்றியம் தா.பழூர், சுத்தமல்லி ஆகிய 2 பிற்காகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

தா.பழூர் பிர்காவில் 15 வருவாய் கிராமங்களும், சுத்தமல்லி பிர்காவில் 17 வருவாய் கிராமங்களும் அமைந்துள்ளன. இதில் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 52 ஆயிரத்து 799 ஆண்களும், 53 ஆயிரத்து 343 பெண்களும் என மொத்தம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 142 பேர் உள்ளனர். மேலும் இங்கு 82 ஆயிரத்து 542 வாக்காளர்கள் உள்ளனர்.

நெல் சாகுபடி

காவிரி டெல்டா பாசன பகுதியாக அறியப்படும் கொள்ளிடக்கரையையொட்டி அமைந்துள்ள சாத்தம்பாடி, கோவிந்தபுத்தூர், ஸ்ரீபுரந்தான், காரைக்குறிச்சி, வாழைக்குறிச்சி, தென்கச்சி பெருமாள்நத்தம், தா.பழூர், இடங்கண்ணி, சோழமாதேவி, கோடாலிகருப்பூர், உதயநத்தம், வேம்பு குடி ஆகிய ஊராட்சிகள் அதிகளவு நெல் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதி விவசாயிகள் 2 முதல் மூன்று போகம் வரை நீர் ஆதாரத்தின் இருப்பு நிலையை பொறுத்து நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.

அதேபோல் இதே பகுதிகளில் கூடுதலாக கரும்பு உற்பத்தி செய்வதுடன், உளுந்து, பயிறு உள்ளிட்ட தானிய வகைகளையும் உற்பத்தி செய்து வருகின்றனர். அதேபோல் அரும்பாவூர், குணமங்கலம், கடம்பூர், உல்லியகுடி, கொலையனூர், அணிக்குறிச்சி, சுத்தமல்லி, ஆதிச்சனூர், வெண்மான்கொண்டான், மனகெதி, சுத்தமல்லி, நடுவலூர், காடுவெட்டாங்குறிச்சி, காசாங்கோட்டை, இருகையூர், கார்குடி, நாயகனைபிரியாள், பொற்பொதிந்தநல்லூர், சோளம் அணைக்குடம், கோடங்குடி, சிந்தாமணி, ஆகிய ஊராட்சிகளில் நிலக்கடலை, எள், முந்திரி, மக்காச்சோளம், மிளகாய், காய்கறிகள் மற்றும் மலர்கள் சாகுபடி உள்ளிட்ட பல்வேறு விவசாய மற்றும் தோட்டக்கலை சார்ந்த தொழில்களில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

தா.பழூர் சட்டமன்ற தொகுதி

தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு ஒரு காலத்தில் சட்டமன்ற தொகுதியின் தலைநகரமாக இருந்த பெருமை உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு தமிழக சட்டமன்ற வரலாற்றில் ஒரே ஒருமுறை மட்டும் 5 ஆண்டுகள் தா.பழூர் சட்டமன்ற தொகுதி சட்டசபையை அலங்கரித்தது. 1962-ம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாகாண சட்டமன்ற தேர்தலில் தா.பழூர் சட்டமன்றத் தொகுதி இடம் பெற்றது. அப்போது அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய சட்டசபை தொகுதிகள் இருந்தன.

1962-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தா.பழூர் தொகுதி தி.மு.க. வேட்பாளரான ராமசாமி 40 ஆயிரத்து 593 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சுப்பையா 22 ஆயிரத்து 969 வாக்குகள் பெற்றார். இந்த தேர்தலில் 17 ஆயிரத்து 624 வாக்குகள் முன்னிலை பெற்ற ராமசாமி 5 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.

தொகுதி மறு சீரமைப்பு

அப்போதைய தா.பழூர் தொகுதியில் தஞ்சை மாவட்டத்தின் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியின் ஒரு பகுதி இணைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு நடைபெற்ற தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு தா.பழூர் சட்டமன்ற தொகுதி நீக்கப்பட்டு அதன் ஊராட்சிகள் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் இணைக்கப்பட்டன.

தா.பழூர் ஒன்றியம் மிகவும் பழமையான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கிராமங்களை உள்ளடக்கிய பகுதியாக உள்ளது. தற்போது தாலுகா தலைநகரமாக உள்ள ஜெயங்கொண்டத்திற்கும் ஆர்.டி.ஓ. அலுவலகம் அமைந்துள்ள உடையார்பாளையம் பகுதிக்கும் சென்று வருவதற்கு தா.பழூர் ஒன்றியத்தின் கடை கோடியிலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து தான் அடைய வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும், வருவாய் துறை சார்ந்த அனைத்து தேவைகளையும் ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்திற்கு சென்றே நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. எனவே தா.பழூர் ஒன்றியத்தை தனி தாலுகாவாக அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வருவாய் துறை

தா.பழூரில் வசிக்கும் ஓய்வு பெற்ற துணை கலெக்டர் முருகன்:- கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தா.பழூரை தலைநகராக கொண்டு தாலுகா அமைப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அது தொடர்ந்து நடைபெறவில்லை. கோப்புகள் அனைத்தும் தயாரான நிலையில் என்ன காரணத்தால் தாலுகா அமைவது நின்று போனது என்பது தெரியவில்லை. ஆனால் தாலுகா அமையும் போது வருவாய் துறை சார்ந்த கோரிக்கைகள் விரைவில் தீர்க்கப்படும். எனவே தா.பழூர் தாலுகாவை அமைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தாலுகா தலைமை மருத்துவமனை

தா.பழூரில் வசிக்கும் ஓய்வு பெற்ற வளர்ச்சித்துறை ஆணையர் லட்சுமிகாந்தன்:- தா.பழூர் ஊராட்சி ஒன்றியம் அதிக போக்குவரத்து வசதிகள் இல்லாத கிராமங்களை அதிகளவில் கொண்ட ஊராட்சி ஒன்றியம். இன்றளவும் பல ஊர்களில் சாலை வசதிகள் மேம்படுத்தப்படாமல் மண் சாலைகளாகவே உள்ளன. தா.பழூர் தாலுகா அமைவதின் மூலம் ஏற்கனவே இங்கு இருக்கும் வட்டார சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்பட்டு அவசர சிகிச்சைகளும் செய்யும் வகையில் தாலுகா தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது. மேலும், பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலகங்களும் இங்கு ஏற்படுத்தப்படும்.

நவீன அரிசி ஆலைகள்

ஸ்ரீபுரந்தான் பகுதியை சேர்ந்த விவசாயி பாண்டியன்:- தா.பழூரில் முந்திரி சாகுபடி அதிகளவில் நடைபெற்று வருகிறது. எனவே அரசு இதனை கொள்முதல் செய்து மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இப்பகுதியில் நவீன அரிசி ஆலைகளை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் வேலைவாய்ப்பு பெருகும்.

நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய் வித்துக்களை விற்பனை செய்வதற்கு விவசாயிகள் ஜெயங்கொண்டம் மார்க்கெட் கமிட்டிக்கு தான் செல்ல வேண்டி உள்ளது. இந்தநிலை மாறி மார்க்கெட் கமிட்டி நமது ஊரிலேயே ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் ஏற்படும். அதைவிட நிர்வாகம் எளிமைப்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்படுவதற்கு தாலுகா பிரிப்பது அவசியமானதாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story