முட்புதரில் பிணமாக கிடந்த வடமாநில தொழிலாளி
திப்பம்பட்டியில் வடமாநில தொழிலாளி முட்புதரில் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி
திப்பம்பட்டியில் வடமாநில தொழிலாளி முட்புதரில் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
முட்புதரில் பிணம்
பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டியில் நேற்று காலையில் பொதுமக்கள் நடைபயிற்சி சென்றனர். அப்போது ஒருவர் தலையில் பலத்த காயங்களுடன் முட்புதரில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து கோமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இறந்த நபருக்கு சுமார் 45 வயது இருக்கும் என்பது தெரியவந்தது.
மேலும் வடமாநில தொழிலாளியான அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து எதுவும் தெரியவில்லை. இதற்கிடையில் அவரது தலையின் பின்புறம் காயம் இருந்தது. இதனால் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் விசாரணை
இதற்கிடையில் இறந்து கிடந்த நபரின் தலையில் ஏற்கனவே அடிபட்டு, அதற்கு கட்டு போட்டு இருந்தது தெரியவந்தது. எனவே அவர் ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டு வரும் வழியில் கீழே விழுந்து இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இறந்த நபரின் புகைப்படத்தை அருகில் உள்ள தொழிற்சாலைகளில் காட்டி அவரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். இறந்த நபர் ஊதா நிறத்தில் உள்பனியனும், கருப்பு-வெள்ளை நிற கோடு போட்ட சட்டையும் அணிந்து இருந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.