கற்றல் இடைவெளியை குறைக்க எண்ணும், எழுத்தும் திட்டம்


கற்றல் இடைவெளியை குறைக்க எண்ணும், எழுத்தும் திட்டம்
x

கற்றல் இடைவெளியை குறைக்க எண்ணும், எழுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

கரூர்

கரூர் மாவட்டம், புலியூர் கவுண்டம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளி, உள்வீரராக்கியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்ட செயல்பாடுகளை கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டு மாணவ, மாணவிகளிடம் கற்றல் திறன்களை கேட்டறிந்தார். அப்போது அவர் கூறியதாவது:- 2022-23-ம் கல்வியாண்டில், கொரோனா தொற்றுநோயின் விளைவாக 8 வயதுக்கு உட்பட்ட மாணவர்களிடையே ஏற்படும் கற்றல் இடைவெளியை குறைக்க, ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்தனியாக உதவும் வகையில், இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. 2025-ம் ஆண்டுக்குள் அடிப்படை எண்ணையும், எழுத்தறிவையும் உறுதி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது.2023-24-ம் கல்வியாண்டில் கற்றல் இடைவெளியை மதிப்பிடுவதற்கும், குறைப்பதற்கும், எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ், 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு "அரும்பு, மொட்டு மற்றும் மலர்" என்ற பணிப்புத்தகங்களை பள்ளிக்கல்வித்துறை வழங்கி உள்ளது. மேலும் இந்த ஆண்டு முதல் 4 மற்றும் 5-ம் வகுப்பு குழந்தைகளும் சேர்க்கப்பட்டுள்ளனர். அதன்படி "ஆன் பார்" மற்றும் "கீழ் ஆன் பார்" என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த முயற்சியின் கீழ், குழந்தைகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூகஅறிவியல் ஆகிய 5 பாடங்களிலும் பயிற்சி புத்தகங்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும். இந்த பாடங்கள் கதைகள், பாடல்கள், நடனம், பொம்மலாட்டம், வினாடி வினாக்கள் மற்றும் கதை சொல்லும் வடிவத்தில் மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் மூலம் நமது அரசுப் பள்ளி மாணவர்களும் கற்றல் திறனைத் தாண்டி பாடுதல், கதை சொல்லுதல், நடிப்பு என அனைத்து திறன்களிலும் தேர்ச்சி பெறுவார்கள். கற்றல் குறைபாடுகள் உள்ள மாணவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் கற்றல் திறன்களை அடைய வாய்ப்பு அளிக்கப்படுகிறது. என்ன கற்பிக்க வேண்டும், எப்படி கற்பிக்க வேண்டும் என்பதை ஆசிரியர்களுக்கான ஆசிரியர் கையேடுகள் மூலம் கற்பித்தல் முறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில் இத்திட்டத்தை செயல்படுத்துவது மாவட்ட மற்றும் வட்டார அளவிலான அலுவலர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது, என்றார். இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மணிவண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story