பகுதிநேர ரேஷன் கடையை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்


பகுதிநேர ரேஷன் கடையை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்
x
தினத்தந்தி 30 Jan 2023 7:15 PM GMT (Updated: 2023-01-31T00:45:55+05:30)

பகுதிநேர ரேஷன் கடையை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று கலெக்டரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

திண்டுக்கல்

குறைதீர்க்கும் கூட்டம்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் விசாகன் தலைமையில் நேற்று நடந்தது. இதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு கலெக்டரிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். இந்த நிலையில் வேடசந்தூர் தாலுகா குன்னம்பட்டியை சேர்ந்த கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் கிராம மக்கள் சார்பில் சிலர் கூட்டத்தில் பங்கேற்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், எங்கள் ஊரில் பகுதி நேர ரேஷன் கடை உள்ளது. ஆனால் செயல்படவில்லை. எங்கள் ஊரில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சேனன்கோட்டையில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் அங்கு ரேஷன் பொருட்கள் வாங்க நாள் முழுவதும் காத்திருக்க வேண்டி உள்ளது. எனவே எங்கள் பகுதியில் உள்ள பகுதிநேர ரேஷன் கடையை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

பஸ் வசதி வேண்டும்

அதையடுத்து குரும்பபட்டி, கொலக்காரன்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பள்ளி மாணவ-மாணவிகளுடன் கலெக்டர் அலுவலகம் வந்து கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு அரசு பஸ் வசதி செய்யப்படவில்லை. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே பஸ் வசதியை செய்து கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவர்களை தொடர்ந்து பில்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்க நிர்வாகிகள் சார்பில் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும். மேலும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கான அனுமதி சீட்டை விழா கமிட்டி மூலமே வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்து இருந்தனர்.

270 மனுக்கள்

மேற்கண்ட மனுக்கள் உள்பட மொத்தம் 270 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதையடுத்து குஜிலியம்பாறை பகுதியை சேர்ந்த 3 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் லதா மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.


Next Story