விமானத்தில் திருச்சி வந்த பயணி திடீர் சாவு
விமானத்தில் திருச்சி வந்த பயணி திடீரென உயிரிழந்தார்.
செம்பட்டு:
திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு மலிந்தோ விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் மலேசியாவை சேர்ந்த ராம.அழகப்பன்(வயது 78) என்ற பயணியும் வந்தார். அவர் திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை மற்றும் இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகளின் சோதனையை முடித்துக் கொண்டு, காரைக்குடி நோக்கி செல்வதற்காக, விமான நிலைய முனைய பகுதியில் இருந்து ஒரு காரில் புறப்பட்டார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கார் டிரைவர் உடனடியாக அவரை ஜெயில் கார்னர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு டாக்டர்கள், அவரை சோதனை செய்தபோது அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. இது குறித்து உடனடியாக ஏர்போர்ட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.