பாதுகாப்புக்கு ரோந்து வாகனம் துணையாக வரும்
ராமநாதபுரம் மாவட்டத்தில் இரவு நேரங்களில் அவசர தேவைகளுக்காக பெண்கள் தனியாக செல்ல அச்சப்பட வேண்டாம் எனவும், போன் செய்தால் பாதுகாப்புக்கு ரோந்து வாகனம் துணையாக வரும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இரவு நேரங்களில் அவசர தேவைகளுக்காக பெண்கள் தனியாக செல்ல அச்சப்பட வேண்டாம் எனவும், போன் செய்தால் பாதுகாப்புக்கு ரோந்து வாகனம் துணையாக வரும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தெரிவித்துள்ளார்.
புதிய திட்டம்
தமிழகத்தில் இரவில் தனியாக செல்ல அச்சப்படும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க காவல்துறை பெண்கள் பாதுகாப்பு திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இரவில் பெண்கள் தனியாக பயணிப்பது சூழ்நிலைகள் மற்றும் செல்லும் வழித்தடத்தின் தன்மை காரணமாக அச்சம் ஏற்படுவது இயல்பு. இவ்வாறு அச்சப்படும் பெண்களின் அச்ச உணர்வினை போக்கும் வகையில் அவர்களுக்கு காவல்துறை உதவ முன்வந்துள்ளது.
இதன்படி இரவில் தனியாக செல்லும் தேவை ஏற்படும் பெண்களுக்கு உதவும் வகையில் காவல்துறை உடன் பாதுகாப்புக்காக துணையாக வரும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பெண்கள் தங்களுக்கான இடங்களுக்கு அவசர அவசியம் கருதி தனியாக செல்ல வேண்டிய சூழல் எழுந்தால் அவர்கள் தங்களின் பாதுகாப்பிற்காக காவல்துறையின் உதவியை நாடலாம்.
ரோந்து வாகனம்
ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையை 100 என்ற கட்டுப்பாட்டு அறைக்கோ, 1091 என்ற ஹெல்ப் லைன் எண்ணையோ, ஹலோ போலீஸ் 8300031100 என்ற எண்ணையோ அழைத்து தங்களுக்கான உதவியை கோரினால் சிலநிமிடங்களில் காவல்துறை ரோந்து வாகனம் வந்து சேரும். அச்ச உணர்வுடன் பாதுகாப்பு கோரும் பெண்கள் அவர்கள் செல்லும் இடங்களுக்கு அச்சமின்றி செல்லும்வரை ரோந்து வாகனத்தில் போலீசார் துணையாக வந்து பெண்கள் சேரும் இடம்வரை கொண்டு சேர்த்து திரும்புவார்கள்.
இதற்காக இரவு நேர ரோந்து போலீசார், அந்தந்த பகுதி காவல்நிலைய போலீசார் விழிப்புடன் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் தனியாக செல்லும் பெண்களின் அச்ச உணர்வை போக்குவதுடன் காவல்துறை துணையாக பாதுகாப்பிற்காக வருகிறது என்ற நம்பிக்கை ஏற்படும். இது பெண்களுக்கு முழு பாதுகாப்பு உணர்வினை ஏற்படுத்தும். வாரத்தின் அனைத்து நாட்களும் இரவு நேர பாதுகாப்பிற்காக அச்சப்படும் பெண்கள் தங்களுக்கு தேவை ஏற்படும் பட்சத்தில் இந்த புதிய திட்டத்தினை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தெரிவித்துள்ளார்.