பண்டிகை காலங்களில் தொடரும் பிரச்சினை:பஸ்சிற்காக காத்து கிடக்கும் பயணிகளுக்கு நிரந்தர தீர்வு எப்போது?


பண்டிகை காலங்களில் தொடரும் பிரச்சினை:பஸ்சிற்காக காத்து கிடக்கும் பயணிகளுக்கு நிரந்தர தீர்வு எப்போது?
x
தினத்தந்தி 23 Oct 2022 12:15 AM IST (Updated: 23 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பண்டிகை காலங்களில் தொடரும் பிரச்சினை காரணமாக பஸ்சிற்காக பயணிகள் காத்து கிடக்கும் பிரச்சினைக்கு நிரந்த தீர்வு எப்போது என்று எதிர்பார்த்து உள்ளனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பண்டிகை காலங்களில் தொடரும் பிரச்சினை காரணமாக பஸ்சிற்காக பயணிகள் காத்து கிடக்கும் பிரச்சினைக்கு நிரந்த தீர்வு எப்போது என்று எதிர்பார்த்து உள்ளனர்.

நிரந்தர தீர்வு கிடைக்குமா?

பொங்கல், தீபாவளி என பண்டிகை காலங்களில் பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்குவது வழக்கம். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் வால்பாறை மக்கள் பண்டிகை காலங்களில் படாதபாடுபட்டு தான் ஊருக்கு செல்ல வேண்டிய உள்ளது. குழந்தைகளை தூக்கி கொண்டு பஸ்கள் வரும் ஓடி சென்று இருக்கை பிடிக்க பொதுமக்கள் படும் சிரமத்திற்கு விடிவு காலம் எப்போது பிறக்கும் என்று தெரியவில்லை. வழக்கம் போன்ற இந்த ஆண்டும் தீபாவளிக்கு ஊருக்கு செல்ல பொதுமக்கள் மணிக்கணக்கில் காத்திருந்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் பயணிகள் கூறியதாவது:-

பொள்ளாச்சியில் தங்கி படிக்கும் வால்பாறை மாணவி மகாலட்சுமி:-

வால்பாறை சொந்த ஊராகும். பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் செவிலியர் படிப்பு படித்து வருகின்றேன். தீபாவளிக்கு ஊருக்கு செல்வதற்கு பஸ் நிலையத்திற்கு வந்து நீண்ட நேரமாகியும் பஸ் வரவில்லை. ஒரு சில பஸ்கள் வந்தாலும் பஸ் நிலையத்திற்கு வரும்போதே நிரம்பி தான் வருகிறது. ஒவ்வொரு பண்டிகைக்கும் வால்பாறைக்கு செல்ல இதே நிலை தான் தொடருகிறது. எனவே அதிகாரிகள் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பஸ்கள் இல்லை

திருப்பூர் தொழிலாளி ராஜா:-

திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வருகிறேன். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு தான் சொந்த ஊரான வால்பாறை சோலையார் அணை பகுதியில் செல்வது வழக்கம். திருப்பூரில் இருந்து பொள்ளாச்சிக்கு வந்தால் இங்கு பஸ் இல்லை. இதனால் குழந்தைகளை வைத்துக் கொண்டு நீண்ட நேரம் பஸ்சிற்காக காத்திருக்க வேண்டிய உள்ளது. கூட்டம் அதிகமாக காணப்படுவதால் குழந்தைகளை வைத்துக் கொண்டு ஓடி சென்று பஸ்சில் இடம் பிடிக்க முடியவில்லை. தீபாவளியையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு உள்ளதாக கூறுகின்றனர். ஆனால் வழக்கமாக செல்லும் பஸ்கள் தான் செல்கிறது. பண்டிகை காலங்களில் வால்பாறைக்கு செல்ல கூடுதல் பஸ்கள் இயக்குவதில்லை. இதனால் ஒவ்வொரு முறையும் சிரமத்திற்கு மத்தியில் தான் ஊருக்கு சென்று பண்டிகையை கொண்டாடி வருகின்றோம்.

நடவடிக்கை எடுப்பதில்லை

அம்பராம்பாளையத்தில் தங்கி படிக்கும் மாணவர் பிரசாந்த்:-

வால்பாறை அருகே உள்ள இஞ்சிபாறையில் உள்ள கிராமத்துக்கு செல்வதற்கு பஸ் நிலையத்திற்கு வந்தேன். ஆனால் ஒரு பஸ் மட்டும் தான் நிற்கிறது. ஆனால் ஏராளமான பெண்கள், குழந்தைகள் பஸ்சிற்காக காத்திருக்கின்றனர். நகர்ப்புற தேர்தலின் போது வாக்களிக்க சென்ற போது இதே போன்று பஸ்கள் இயக்காததால் மறியலில் ஈடுபட்டனர். மேலும் ஒவ்வொரு பண்டிகையின் போதும் மறியல் செய்தால் பஸ் இயக்குகின்றனர். பஸ்கள் இயக்காததால் வாடகை கார்களில் கூடுதல் கட்டணம் செலுத்தி செல்ல வேண்டிய உள்ளது. கூட்டம் அதிகமாக இருந்தும் அதிகாரிகள் கூடுதல் பஸ்களை இயக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பஸ்களைவிட 4 மடங்கு அதிகம்: வாடகை கார்களில் நபருக்கு ரூ.250 கட்டணம்

வால்பாறையில் வசிக்கும் மக்கள் திருப்பூர், சென்னை, கோவை என வெளியூர்களில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். பண்டிகை காலங்களில் வால்பாறைக்கு செல்வதற்கு பொள்ளாச்சிக்கு வந்து தான் செல்ல வேண்டும். ஆனால் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு செல்ல சிரமப்பட வேண்டிய உள்ளது. சிறப்பு பஸ்கள் இயக்காமல் இருப்பதை பயன்படுத்தி வாடகை கார்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை போக்குவரத்து கழக அதிகாரிகளும் கண்காணிப்பதில்லை. பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு செல்ல அரசு பஸ் ஒரு நபருக்கு ரூ.64 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதே வாடகை கார்களில் ஒரு நபருக்கு ரூ.250 கட்டணம் கொடுக்க வேண்டிய உள்ளது. பஸ்களை விட 4 மடங்கு கூடுதலாக கட்டணம் கொடுத்து செல்ல வேண்டிய உள்ளது. எனவே அதிகாரிகள் பண்டிகை காலங்களில் வால்பாறைக்கு சென்று வருவதற்கு கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தை பொறுத்து சிறப்பு பஸ்கள்

அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:- பண்டிகை காலங்களில் மற்ற பகுதிகளுக்கு செல்வதை விட வால்பாறைக்கு செல்ல அதிகமாக கூட்டம் இருக்கும். இதன் காரணமாக கூட்டத்தை பொறுத்து தீபாவளியையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதேபோன்று கோவை, திருப்பூர், பழனி, மதுரை போன்ற பகுதிகளுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தீபாவளிக்கு ஊருக்கு சென்று திரும்பி வருவதற்கும் சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பஸ்கள் சீராக வருவதை கண்காணிக்க அங்கு தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Related Tags :
Next Story