அண்ணாமலையார் கோவிலுக்குள் திடீரென கத்தியுடன் நுழைந்த நபர்... அலறி அடித்து ஓடிய பக்தர்கள் - தி.மலையில் பரபரப்பு


அண்ணாமலையார் கோவிலுக்குள் திடீரென கத்தியுடன் நுழைந்த நபர்... அலறி அடித்து ஓடிய பக்தர்கள் - தி.மலையில் பரபரப்பு
x
தினத்தந்தி 22 March 2023 5:59 PM IST (Updated: 22 March 2023 6:04 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்குள் கத்தியுடன் நுழைந்த போதை ஆசாமியால் பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்குள் கத்தியுடன் நுழைந்த போதை ஆசாமியால் பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ராஜகோபுரம், திருமஞ்சன கோபுரம் மற்றும் அம்மணியம்மன் கோபுரம் ஆகிய மூன்று வாயில் வழியாக பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் இன்று நண்பகலில் பலத்த பாதுகாப்பையும் மீறி தெற்கு கோபுரமான திருமஞ்சன கோபுரம் வழியாக போதை ஆசாமி ஒருவர் கோவிலுக்குள் கத்தியுடன் நுழைந்தார். பின்னர் கத்தியை காட்டி பக்தர்களை மிரட்டி உள்ளார்.

இதனால் பயந்த பக்தர்கள் அலறியடித்து அங்கும் இங்கும் ஓடினர். மேலும் கோவில் அலுவலகத்திற்குள்ளே புகுந்த அந்த நபர் அங்குள்ள ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். கத்தியை கொண்டு அங்குள்ள கண்ணாடியை உடைத்துள்ளார். கோவில் ஊழியர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் முறையிட்டனர்.

இதையடுத்து போலீசார் அந்த போதை ஆசாமியை கைது செய்தனர். விசாரணையில் அந்த நபர் பெங்களூருவைச் சேர்ந்த அப்பு என்பது தெரிய வந்துள்ளது. அவர் எதற்காக கோவிலுக்குள் நுழைந்தார் என்பது குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலுக்குள் கத்தியுடன் நுழைந்த போதை ஆசாமியால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story