சாராயத்தை விற்க முயன்றவர் கைது
வேப்பந்தட்டை அருகே சாராயத்தை விற்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் ரோந்து
பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேலுமணி தலைமையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் ரஞ்சனா, சப்-இன்ஸ்பெக்டர் செந்தமிழ்செல்வி மற்றும் போலீசார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கள்ளச்சாராயம் தயாரிப்பது, ஊறல் போடுவது மற்றும் சாராயம் விற்பனை செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுகிறவர்களை தடுப்பதற்காக சிறப்பு தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வேப்பந்தட்டை அருகே உள்ள காரியானூர் பகுதியில் நேற்று திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
சிறையில் அடைப்பு
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை சந்தேகத்தின் பேரில் தடுத்து சோதனை செய்தனர். அப்போது அவர் 100 மில்லி அளவில் 210 பிளாஸ்டிக் பைகளில்சாராயத்தை விற்பனை செய்வதற்காக எடுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் காரியானூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்லதுரை என்பவரது மகன் ரமேஷ் (வயது 32) என்பது தெரியவந்தது. இதையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி பறிமுதல் செய்த சாராயத்தை போலீசார் அதே இடத்தில் கொட்டி அழித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ரமேஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இது போன்று தங்களது பகுதிகளில் யாரேனும் அரசால் தடை செய்யப்பட்டசாராயம் தயாரித்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ மாவட்ட போலீஸ் அலுவலகத்திற்கு 9498100690 என்ற செல்பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.