அன்புஜோதி ஆசிரமத்தில் இருந்தவர் திடீர் சாவு


அன்புஜோதி ஆசிரமத்தில் இருந்தவர் திடீர் சாவு
x
தினத்தந்தி 5 April 2023 6:45 PM GMT (Updated: 5 April 2023 6:45 PM GMT)

விழுப்புரம் அருகே அன்புஜோதி ஆசிரமத்தில் இருந்தவர் திடீரென இறந்தார்.

விழுப்புரம்

விழுப்புரத்தை அடுத்த குண்டலப்புலியூரில் அன்புஜோதி என்ற பெயரில் அனுமதியின்றி இயங்கிய ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அடைத்து வைத்து அடித்து துன்புறுத்தல், பெண்களுக்கு பாலியல் தொந்தரவு என பல்வேறு புகார்கள் எழுந்தன.

இந்த புகாரின்பேரில் விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார், அந்த ஆசிரமத்தில் சோதனை நடத்தி ஆசிரம நிர்வாகி ஜூபின்பேபி, அவரது மனைவி மரியாஜூபின் உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர். மேலும் ஆசிரமத்தில் அனுமதிக்கப்பட்டவர்கள் வெளிமாவட்டங்களில் உள்ள ஆசிரமங்களுக்கும், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே விழுப்புரம் வழுதரெட்டி காலனி அன்னை இந்திரா தெருவை சேர்ந்த அருள்மணி (வயது 48) என்பவர் 20 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு பல மருத்துவமனைகளில் மருத்துவம் பார்த்து கவனிக்க முடியாததால் ஓராண்டுக்கு முன்பு குண்டலப்புலியூர் அன்புஜோதி ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 9-ந் தேதி அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம் மதியம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இரவு இறந்தார்.

இதுகுறித்து அவரது சகோதரர் அருள்ஜோதி, கெடார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர், ஆசிரமத்தில் அடித்து துன்புறுத்தியதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story