அரசூர் கிராமத்தில் மயானத்துக்கு இடம் தேர்வு செய்ய வேண்டும்


அரசூர் கிராமத்தில் மயானத்துக்கு இடம் தேர்வு செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 9 Jun 2023 12:15 AM IST (Updated: 9 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் அருகே அரசூர் கிராமத்தில் மயானத்துக்கு இடம் தேர்வு செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே அரசூர் கிராமத்தில் மயானத்துக்கு இடம் தேர்வு செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏழ்மை நிலையில்...

கொள்ளிடம் அருகே அரசூர் ஊராட்சியை சேர்ந்த ஜே.ஜே. நகர் உள்ளது. இந்த கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். மாவட்டத்திலேயே பழங்குடி இனத்தை சேர்ந்த ஒருவர் இந்த ஊராட்சியில்தான் ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறார். இந்த ஜே.ஜே. நகரில் வசித்து வரும் குடும்பங்களை சேர்ந்தவர்கள் மிகவும் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானோர் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மூலம் பிளாஸ்டிக் பொருட்களை வெளியூர்களுக்கு எடுத்து சென்று விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். சிலர் தினக்கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். மிகவும் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வரும் இங்குள்ள மக்களுக்கு உரிய மயான வசதி இல்லை.

வாய்க்கால் கரை

இக்கிராமத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில் உள்ள வாய்க்கால் கரையில், இந்த கிராமத்தில் இறந்தவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டும், ஏரியூட்டப்பட்டும் வருகிறது. அவ்வாறு இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு அந்த பகுதிக்கு சுமந்து செல்ல மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். உரிய சாலை வசதி இல்லாததால் சற்று தூரம் சென்று பிறகு வாய்க்காலில் இறங்கி பின்னர் வாய்க்கால் கரையில் உடலை அடக்கம் செய்து வருகின்றனர்.

எரியூட்டு கொட்டகை

இந்த பகுதிக்கு இதுவரை மயானத்துக்கு இடம் அளிக்காத நிலை இருந்து வருகிறது. மயானத்துக்கு இடம் அளிக்க பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனியும் தாமதிக்காமல் ஜே.ஜே. நகர் பகுதிக்கு மயானத்துக்கு இடம் ஒதுக்கீடு செய்து, அதில் மயான எரியூட்டு கொட்டகையும் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story