மாட்டுக்கு புல் அறுத்தபோது மின்சாரம் தாக்கி பிளஸ்-1 மாணவன் பலி
குடியாத்தம் அருகே மாட்டுக்கு புல் அறுக்கசென்ற பிளஸ்-1 மாணவன் மின்சாரம் தாக்கி இறந்தான். போலீசுக்கு தெரியாமல் உடலை எரித்ததாக தந்தை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புல் அறுக்க சென்றான்
குடியாத்தம் அடுத்த முக்குன்றம் ஊராட்சி, சுண்ணாம்பு மேடு பகுதியை சேர்ந்தவர் குமார். ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவராக உள்ளார். இவருக்கு மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் உண்டு. இளைய மகன் மணிகண்டன் (வயது 16) தட்டப்பாறை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தான்.
சனிக்கிழமை விடுமுறை என்பதால் மணிகண்டன் மாட்டுக்கு புல் அறுக்க நிலத்திற்கு சென்றுள்ளான். அங்கு புல் அறுத்துக் கொண்டிருந்த போது, அந்த நிலத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றுக்கு மின் கம்பத்தில் இருந்து நிலத்துக்கு அடியில் மின் ஒயர்கள் புதைத்து மின்சாரம் பெறப்பட்டுள்ளது.
மின்சாரம் தாக்கி பலி
இதனை அறியாத மணிகண்டன் புல் அறுக்கும்போது தவறுதலாக பூமிக்கடியில் சென்ற மின் ஒயரையும் சேர்த்து அறுத்துள்ளான். இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளான்.
மாட்டுக்கு புல் அறுக்க சென்ற மகன் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் சென்று பார்த்தபோது மணிகண்டன் மின்சாரம் தாக்கி இறந்தது தெரிய வந்தது. இதனையடுத்து மாணவனின் உடலை வீட்டிற்கு கொண்டு வந்து மாலையில் போலீசுக்கு தெரியாமல் உடலை எரித்துள்ளனர்.
தந்தை மீது வழக்கு
இது குறித்து தகவல் அறிந்ததும் முக்குன்றம் கிராம அலுவலர் வெங்கடாஜலபதி குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சப்-இன்ஸ்பெக்டர் பழனி ஆகியோர் குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.